- Home
- Tamil Nadu News
- சிந்து நதிநீர் விவகாரம்! 30 கோடி மக்களின் வாழ்வாதாரம்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமான்!
சிந்து நதிநீர் விவகாரம்! 30 கோடி மக்களின் வாழ்வாதாரம்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமான்!
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதியைத் தடுத்து நிறுத்துவது நியாயமற்றது என்று சீமான் கூறியுள்ளார். 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Seeman
Seeman in support of Pakistan: பாகிஸ்தானில் 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? சீமான் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். பகல்காமில் அப்பாவி மக்களைத் தாக்கிய பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ, அதுபோலத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப்பயணிகளைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய உள்ளூர் காஷ்மீர் மக்களும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
India-Pakistan War
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய அரசின் படுதோல்வி
சுற்றுலா சென்ற இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான கொடுந்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது. பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என்பது இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வியால் நிகழ்ந்த கொடுநிகழ்வாகும். பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்க, மறக்கடிக்க, சிந்து நதியைத் தடுப்பதென்பது, மக்களின் உணர்வுகளைத் தூண்டி திசைதிருப்பும் செயலன்றி வேறில்லை. பாஜக அரசிற்கு உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும். பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும்.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்களுக்கான விசா முழுமையாக நிறுத்தம்! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
indus water Stop
அப்பாவி ஏழை மக்களை நேரடியாக பாதிக்கின்ற கொடுஞ்செயல்
அவற்றை விடுத்து 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? பாகிஸ்தான் நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையோ, வர்த்தகத் தடையோ அந்நாட்டு அரசையும், பெருமுதலாளிகளையுமே அதிகம் பாதிக்குமே தவிர, ஏழை மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், உயிர் ஆதாராமாக விளங்கும் நதிநீரை தடுப்பதென்பது, பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தத் தொடர்புமற்ற அப்பாவி ஏழை மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற கொடுஞ்செயலாகும்.
PM Modi
இது இரக்கமற்றச்செயல்
சிந்து நதியால் அதிகம் பயன்பெறுவது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாழும் சீக்கிய மக்களும்தான். அவர்கள் அனைவரும் எல்லை பிரிப்புவரை இந்த நாட்டின் குடிகளாக இருந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நதிநீர் என்பது வெறும் மனிததேவை மட்டுமன்று. அது மரங்கள், கால்நடைகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர் ஆதாரத்தேவையாகும். உயர்ந்த நோக்கங்களோ, உன்னத லட்சியங்களோ இல்லாது கண்மூடித்தனமாகச் அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சனநாயக அரசு இத்தகைய இரக்கமற்றச்செயலில் ஈடுபடுவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.
இதையும் படிங்க: பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி.! அமித் ஷா பதவி விலகனும்- சீறும் திருமா, சீமான்
Seeman urges the central government
சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை
பாகிஸ்தானுடன் வர்த்தக நிறுத்தம், எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், போர்ப்பதற்றம், பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம், நதிநீர் தடுத்து நிறுத்தம் என இத்தனை அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தான் இசுலாமியர் நாடு என்பதால் பகை நாடென பதறி துடிக்கும் இந்திய அரசுக்கு, இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே? எல்லையற்ற கருணையையும், எதிர்ப்பார்ப்பற்ற அன்பையும் தந்து பெற்ற பிள்ளைகளை வாழ்விக்கும் தாய்மையின் அடையாளமாக, சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.