Schools Reopen: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! நாளை பள்ளிகள் செயல்படுமா?
ஃபெஞ்சல் புயல் சென்னையில் கரையைக் கடந்த பிறகு மழை ஓய்ந்தது, ஆனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. புதுச்சேரிக்கு அருகே புயல் நிலைகொண்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

cyclone fengal
வங்ககடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
Chennai Rains
இந்நிலையில் ஒரே வழியாக நேற்று மாலை 5.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் இரவு 11.30 வரை முழுமையாக கரையை கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை ஓய்ந்தது. இதனால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடாமல் விடிய விடிய கனமழை பெய்தது.
Villupuram Heavy Rain
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை அடிச்சு ஊத்தியது. அதிகபட்சமாக மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்று விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்கு சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
School Holiday
இந்த புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் இன்னும் விடாமல் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை பள்ளிகள் செயல்படுமா அல்லது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Anbil Mahesh
இந்நிலையில் மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக இருந்தால் மட்டும் தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி படி மழை நின்ற பிறகு தேங்கியுள்ள மழைநீர், சீரான மின்சாரம் உள்ளிட்டவை ஆய்வு செய்தபின் பள்ளிகள் திறக்க அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.