- Home
- Tamil Nadu News
- சென்னையில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்!
சென்னையில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ. மழை மற்றும் புயல்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை அப்டேட்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையில், குறிப்பாக அம்பத்தூர்–அண்ணா நகர் பகுதியில், சிறிய புயல்கள் ஆனால் மோசமான இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு மாறும்போது இவை மிகவும் பொதுவானவை.
இடி மின்னல்கள்
பல நேரங்களில், இந்த இடி மின்னல்கள் நேரடியாக ஏரிகளில் விழுகின்றன, எனவே இடி மின்னலின் போது மக்கள் ஏரிகளில் அல்லது அதற்கு அருகில் இருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் திறந்த நீரில் இருந்தால், நீங்கள் அங்குள்ள மிக உயரமான பொருள், அங்குதான் முதலில் மின்னல் தாக்குகிறது என தெரிவித்துள்ளார்.