- Home
- Tamil Nadu News
- வெயிலுக்கு ரெஸ்ட்! 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..! சென்னைக்கும் குட்நியூஸ்!
வெயிலுக்கு ரெஸ்ட்! 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..! சென்னைக்கும் குட்நியூஸ்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது. தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை அதன்பிறகு முற்றிலுமாக குறைந்தது. இப்போது தமிழகத்தில் வெயில் மீண்டும் வாட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
நேற்று (03-11-2025) காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (04-11-2025) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில், மியான்மார் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை
இன்று (4ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (5ம் தேதி) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சேலம், தர்மபுரி
நாளை மறுநாள் (6ம் தேதி) தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
7ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் மழை எப்படி?
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.