- Home
- Tamil Nadu News
- காலையில் சுட்டெரிக்கும் வெயில்! மழை ஆட்டம் அவ்வளவுதானா? வானிலை மையம் கூறுவது என்ன?
காலையில் சுட்டெரிக்கும் வெயில்! மழை ஆட்டம் அவ்வளவுதானா? வானிலை மையம் கூறுவது என்ன?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தற்போது சற்று ஓய்வெடுத்துள்ளது. அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நவம்பர் 4ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றாண்டுகளுக்கு பிறகு பெரிய மழை பெய்தது. இதனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் முழு கொள்ளவை எட்டியது.
காலையில் சுட்டெரிக்கும் வெயில்
எப்போது நவம்பவர், டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே மோந்தா புயல் உருவாகி ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று பிரேக் கொடுத்து நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
சென்னை வானிலை மையம்
இந்நிலையில் வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை வரை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் நவம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும் குறைபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நவம்பர் முதல் வாரத்திற்கு பிறகு மழையை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.