அதிரடி காட்ட தயாராகும் ஆளுநர் ரவி.! தமிழக சட்டப்பேரவையில் இன்று என்ன நடக்கும்.?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். அண்ணா பல்கலை சம்பவம், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் உள்ளிட்ட சம்பவங்களைப் பற்றி அவர் என்ன பேசுவார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamilnadu Assembly
ஆளுநருக்கு வரவேற்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டமானது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை சட்டசபையின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்த முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையேற்று இன்று காலை ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.20 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் ஆளுநர் ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.
இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.
governor ravi
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
இதனையடுத்து தமிழ்தாய் வாழ்த்து பாடல் முடிந்ததும் சபாநாயகர் இருக்கைக்கு முன்னால் உள்ள மைக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரையை நிகழ்த்த தொடங்குவார். ஆளுநர் தனது உரையை படித்த முடித்ததும் அந்த உரையை தமிழில் சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அத்துடன் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவடையும். இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் ரவி தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய உரையை வாசிக்க மறுத்து தானாக கூடுதல் வரிகளை சேர்த்தும், நீக்கியும் படித்திருந்தார்.
governor ravi speech
கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர்
இதனால் ஆளுநர் ரவியின் உரைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார். எனவே இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ரவி என்ன செய்யப்போகிறார் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே எதிர்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்புவதற்கு முன்பாக ஆளுநர் ரவி என்ன செய்ய போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
governor walk out
எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம்
ஆளுநர் உரைக்கு பின்பாக சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்யப்படும். அந்த வகையில் நாளை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததால்,
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நாளை ( செவ்வாய்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். எனவே இந்த சட்டசபை கூட்டமானது வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.