- Home
- Tamil Nadu News
- மாதம் ரூ.1200 உதவித்தொகை.. வேலையும் கிடைக்குது.. தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்
மாதம் ரூ.1200 உதவித்தொகை.. வேலையும் கிடைக்குது.. தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்
தமிழ்நாடு அரசு, கிராமப்புற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இலவச திறன் பயிற்சியுடன் மாத உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் பற்றிய முழு விபரங்களை இங்கு காணலாம்.

மாதம் ரூ.1200 உதவித்தொகை
வேலை தேடும் இளைஞர்களுக்கு திறன், அனுபவம், வருமானம் மூன்றும் ஒரே நேரத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அந்த வாய்ப்பைத்தான் தமிழ்நாடு அரசு தற்போது வழங்கியுள்ளது. கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில், இலவச திறன் பயிற்சியுடன் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் முக்கிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் பயிற்சி திட்டம்
இந்த திட்டம், தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் (DDU-GKY) புதிய 2.0 வடிவமாக செயல்படுத்தப்படுகிறது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களே இதற்கு தகுதி பெறுவார்கள். அரசின் 60% மற்றும் தமிழ்நாடு அரசின் 40% நிதிப் பங்களிப்புடன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்துகிறது.
தமிழக அரசு இலவச பயிற்சி
2025–26 கல்வியாண்டில், சென்னை மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் மற்ற 37 மாவட்டங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட துறைகளின் கீழ், சுமார் 40 வகையான வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள தொழில்களுக்கு குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக 38 பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பயிற்சி முடிந்தது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
வேலைவாய்ப்பு பயிற்சி
பயிற்சியில் தொழில்நுட்ப அறிவுடன், அடிப்படை ஆங்கிலம், பேசும் திறன், கணினி மற்றும் மின்னஞ்சல் பயன்பாடு, குழுவாக வேலை செய்வது, ஆளுமை மேம்பாடு போன்ற மென்மைத் திறன்களும் கற்றுத்தரப்படுகின்றன. ட்ரோன் ஆப்ரேட்டர், மொபைல் போன் டெக்னீசியன், ஏஐ அனலிஸ்ட், வெப் டெக்னாலஜி, சோலார் உபகரண நிறுவல், வெல்டிங், ஜேசிபி ஆப்ரேட்டர், மருத்துவம் மற்றும் நர்சிங் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட பல துறைகள் இதில் அடங்கும்.
தமிழக அரசு இளைஞர் நலத்திட்டம்
பயிற்சி காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை இருக்கும். இந்த காலத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, பாடப் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு, குறைந்தது 50% இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சிலருக்கு சுயதொழில் தொடங்க உதவியும் வழங்கப்படும். மேலும், வேலைக்குச் சேர்ந்த பின்பு ஆறு மாத மாதம் ரூ.1,270 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த திட்டம், வேலை தேடும் கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

