- Home
- Tamil Nadu News
- சென்னையை நெருக்கும் பேராபத்து? அதி கனமழை அலர்ட்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
சென்னையை நெருக்கும் பேராபத்து? அதி கனமழை அலர்ட்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக சென்னை, டெல்டா உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் மட்டுமே மழை பெய்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவில் இருக்கும் இது, வடக்கு இலங்கையில் இன்று இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக பயணித்து, யாழ்ப்பாணத்தை அடையும். அது பலவீனமடைந்து வெளியேறும்.
டெல்டாவில் கனமழை
டெல்டா, கடலூர், புதுச்சேரி முதல் சென்னை வரை மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்படு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் பரவலான மழைக்கு சிறந்த நாட்களாகும். திங்கள் கிழமை சென்னையின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்களில் மழை
டெல்டா, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடற்கரைக்கு அருகே உள்ள வட தமிழக மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயிர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தவுடன் ஈரப்பதம் உள்நோக்கித் தள்ளப்பட்டு, உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறியுள்ளார்.

