- Home
- Tamil Nadu News
- 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! இதை கண்டிப்பாக செய்தால் மட்டுமே பொதுத்தேர்வு! பள்ளிக்கல்வித்துறை!
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! இதை கண்டிப்பாக செய்தால் மட்டுமே பொதுத்தேர்வு! பள்ளிக்கல்வித்துறை!
School Education Department: 2025-2026ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலை தயாரிக்க, பள்ளி மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

எமிஸ் தளம்
தமிழகத்தில் 2025-2026-ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: பள்ளி மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே 2025- 2026ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் அக்டோபர் 6 முதல் 23ம் வரையிலான நாட்களில் EMIS-வலைத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதனையும், மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர் பெயர் (தமிழ்/ஆங்கிலம்) ஆகிய விவரங்களை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வர்கள்
மேற்கொண்ட விவரங்களை சரியான முறையில் பதிவேற்றம் செய்திட இவ்வலுவலகத்தால் வழங்கப்படும் வெற்று Declaration Form-ஐ பதிவிறக்கம் செய்து தேர்வர்களிடம் வழங்கி, பூர்த்தி செய்து தேர்வரது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் படிவத்தினை சரிபார்த்து கையொப்பம் பெற்று தங்கள்வசம் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு பிறப்புச் சான்றிதழ் நகலையும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் வகையில் பள்ளி ஆவணங்கள்/ஆதார் அட்டை நகலினையும் இணைத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவரின் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
மாணவரது பெயர் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருத்தல் வேண்டும். பெயர் முதலிலும், அதனைத் தொடர்ந்து தலைப்பெழுத்தும் இடம்பெறும் வகையில் மாணவரது பெயர் இருக்க வேண்டும். பெயருக்கும் தலைப்பெழுத்துக்கும் இடையில் (Between name and initial) ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருத்தல் வேண்டும் (புள்ளி வைத்தல் கூடாது). இரு தலைப்பெழுத்துக்கள் இருப்பின் இரு தலைப்பெழுத்துக்களுக்குமிடையே ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருத்தல் வேண்டும். பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பெயரில் சில எழுத்துக்கள் திருத்தம் கோரும்பட்சத்தில், பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
பிறந்த தேதி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை, மாணவரின் பிறந்த தேதியினை பிறப்புச் சான்றிதழுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளன்று அன்று கண்டிப்பாக 14 வயது நிறைவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு 14 வயதினை நிறைவு செய்யாதவர்களாக இருப்பின், பார்வை 1-ல் காணும் வயது தளர்வு அரசாணையின்படி, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்/ முதன்மைக் கல்வி அலுவலரிடம் கண்டிப்பாக வயது தளர்விற்கான (Age relaxation) ஒப்புதல் சார்ந்து ஆணை பெற்றிருக்கவேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர். பிறந்த தேதி மாற்றம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
புகைப்படம்
சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவரது மார்பளவு புகைப்படத்தை (Passport size photo) மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் (jpeg, jpg) வடிவில் 50 kb-க்குள் இருக்க வேண்டும்.
மாணவரது பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
மாணவர்களது பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர்களை, அவர்களது பள்ளி ஆவணங்கள் /ஆதார் அட்டையில் உள்ளவாறு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறில்லாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
மாணவர்களது பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின் ஆதார் அட்டையில் உள்ளவாறு சில எழுத்துக்களை மட்டும் திருத்தம் செய்து கொள்ளலாம்.
கைபேசி எண்
தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோரது பாதுகாவலரது கைபேசி எண்ணுக்கே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால் பதிவேற்றம் செய்யப்படும் கைபேசி எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.