- Home
- Tamil Nadu News
- கே.என்.நேருவிற்கு செக்.! பணம் பறிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 10 ரூபாய் நோட்டு- ED வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கே.என்.நேருவிற்கு செக்.! பணம் பறிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 10 ரூபாய் நோட்டு- ED வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Tamil Nadu municipal job scam : நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமனத் தேர்வில் லஞ்சம் பெற்று 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மோசடி நடைபெற்றது எப்படி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் முறைகேடாக பணி நியமனம் செய்வதற்கு ஒரு போஸ்டிங்கிற்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மோசடி எதுவும் நடைபெறவில்லையென மறுத்திருருந்தார். சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பணி நியமனத்தில் எப்படி மோசடி நடைபெற்றது. யார் யாருக்கெல்லாம் தொடர்பு என அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில்,
நகராட்சி துறை பணியில் சேர விரும்பும் நபர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் முதலில் அமைச்சரின் சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ், செல்வமணி, கவி பிரசாத் ஆகியோரை அணுகியுள்ளனர். அவர்களில் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் செலுத்தத் தயாரானவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்துள்ளார்கள் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் நேரு அவரது சகோதரர் கே என்ற ரவிச்சந்திரன் மணிவண்ணன் ஐயர் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையின் போது, இதற்கான ஆதாரம், உதவியாளர்களின் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும, ரமேஷ், செல்வமணி மற்றும் கவி பிரசாத் ஆகியோர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 பிப்ரவரி வரை முக்கிய நபர்கள், சில அதிகாரிகள் மற்றும் இடைத் தரகர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெற்றுள்ளனர் எனவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2024 ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வை நடத்தியது, அதன் முடிவுகள் 2025 பிப்ரவரி 17 அன்று வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகு தகுதி பெற்றவர்களுக்கு ஆலோசனை (counselling) நடைபெற்றது. இறுதி முடிவுகள் ஜூலை 4 அன்று அறிவிக்கப்பட்டன. ஆனால்,
முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே, உதவியாளர்களின் கைப்பேசிகளில் இருந்து, இடைத் தரகர்கள் அனுப்பிய விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஆலோசனை அழைப்புக் கடிதங்களை மீட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அவ்வாறு பரிந்துரைத்த நபர்கள் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளரான செல்வமணி, முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இடை தரகர்களிடமிருந்து தேர்வர்களின் விவரங்களைப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. முடிவுகள் வருவதற்கு முன்பே தேர்வில் வெற்றி பெற்றதற்கு செல்வமணிக்கு நன்றி தெரிவித்து ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தியும் மீட்கப்பட்டிருப்பதாக ED தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனுடன் தொடர்பில் உள்ள கவி பிரசாத், ஆரம்ப சுற்றில் தேர்ச்சி பெறாத ஒருவரை இறுதி மதிப்பெண் பட்டியலில் சேர்க்கச் செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இடை தரகர்கள் தேர்வர்களின் விவரங்களை பகிர்ந்தபின், ஹவாலா பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ரூ.10 நோட்டின் படங்களை, அந்த உதவியாளர்கள் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 232 பக்கம் கொண்ட ஆவணங்கள் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.