- Home
- Tamil Nadu News
- நான் உங்களை விட்டு எங்கேயும் ஓடி போய்ட மாட்டேன்..! பாதிக்க பட்டவர்களிடம் உறுதி கொடுத்த விஜய்
நான் உங்களை விட்டு எங்கேயும் ஓடி போய்ட மாட்டேன்..! பாதிக்க பட்டவர்களிடம் உறுதி கொடுத்த விஜய்
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய், உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என உறுதி அளித்துள்ளார்.

தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டு
கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார நிகழ்ச்சியில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதனை செயல்படுத்தும் விதமாக கரூரில் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக மண்டபம் கிடைக்கவில்லை என தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
மாமல்லபுரம் அழைத்து வரப்பட்ட கரூர் மக்கள்
இதனைத் தொடர்ந்து சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கரூரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பேருந்து மூலம் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்
விடுதியில் தனித்தனி அறையில் தங்கவைக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்த விஜய் அவர்கள் காலில் விழுந்து, உங்களை இங்கு வரவழைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயம் கரூர் வருவேன் என்று உறுதி அளித்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை விட அதிக வேதனையில் விஜய்..
அதன்படி பாதிக்கப்பட்ட பிரபாகரன் தனது தாயுடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாதிக்கப்பட்ட எங்களை விடவும் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். நீங்கள் நிச்சயம் கரூருக்கு வரவேண்டும் என சொன்னதற்கு, உங்களை விட்டு நான் எங்கும் ஓடிவிட மாட்டேன். எப்பொழுதும் உங்களுடன் தான் துணையாக இருப்பேன். நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னை வரவிடாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அனைத்தையும் சமாளித்துவிடலாம் என நினைத்தேன் ஆனால்..
உங்களை சந்தித்துவிட்டு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் தான் வேறு வழியின்றி உங்களை இங்கு வரவழைத்தேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்தால் என்னைப்பற்றியோ, என் குடும்பத்தைப் பற்றியோ அவதூறு பரப்புவார்கள் என்று தெரியும். அதனை சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் இதுபோன்ற சம்பவத்தை நான் எதிர்பார்க்கவில்லை” என பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதும் பிரபாகரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.