உதயநிதிக்கு இத்தனை கோடி கடன் இருக்கா.? வெளியான சொத்து பட்டியல்
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று, தற்போது தமிழக துணை முதல்வராக பதவியேற்கிறார். இந்தநிலையில் உதயநிதியின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
உதயநிதியின் அரசியல் பயணம்
தமிழகத்தில் மக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காவும் பாடுபட்டவர் கலைஞர் கருணாநிதி, இவர் 5 முறை தமிழக முதலமைச்சராகவும், அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக திமுக தலைவராக பதவி வகித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டவர் காலமானார். இதனையடுத்து திமுக தலைவராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின், அதுவரை நேரடி அரசியல் களத்தில் இறங்காத உதயநிதி, 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் கட்சி பணியில் ஈடுபட தொடங்கினார்.
அப்போது தான் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிராமம், கிராம்மாக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர், அதிமுக அரசிற்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார். இதில் முக்கியமாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மக்களுக்கு புரியும் படி பிரச்சாரம் செய்தார்.
vanathi mla udhayanidhi aims
உதயநிதியின் தேர்தல் பிரச்சாரம்
அதாவது எய்ம்ஸ் மருத்துவனை கட்டும் இடத்தில ஒற்றை செங்கல் மட்டுமே இருந்ததாகவும், அதனை தான் எடுத்து வந்திருப்பதாகவும் பேசினார். இந்த பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.இதனையடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கு பரிசாக உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அடுத்ததாக நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் கலக்கியவருக்கு கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது தனது சொந்த தொகுதி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு திமுகவின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டார். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சேப்பாக்கம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வெற்றி பெற்று அசத்தினார்.
udhayanidhi stalin
உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு
எனவே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான வாய்ப்பு கனியவில்லை. எனவே எப்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இதற்கு முடிவாக 2023ஆம் ஆண்டு உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு திட்டங்களையும், வீரர்களையும் ஊக்கப்படுத்தியும் வந்தார்.
இவரது அமைச்சரவையின் கீழ் தேசிய அளவிலான போட்டி மட்டுமல்ல சர்வதேச போட்டிகளும் சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் கார் ரேஸ் போட்டியும் நடத்தியும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என திமுகவினர் சார்பாக தொடர்ந்து வழியுறுத்தப்பட்டது. பல மாதங்களாக இந்த குரல் எழுந்திருந்தது. இதற்கு பதில் நேற்று இரவு கிடைத்துள்ளது.
துணை முதலமைச்சரான உதயநிதி
ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த உத்தரவில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 6 வருடங்களில் உதயநிதியின் அரசியல் வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கிய அரசியல் பயணத்தில் 2024ஆம் ஆண்டு துணை முதல்வராக உதயநிதி உயர்ந்துள்ளார்.
இந்தநிலையில் உதயநிதி அரசியலில் கால் வைப்பதற்கு முன்பாக திரைத்துறையில் தனது முத்திரையையும் பதித்துள்ளார். குறிப்பாக ரெட் ஜெயண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவர் பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். இது மட்டுமில்லாமல் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். கடைசியாக மாமன்னன் என்ற படத்திலும் நடத்திருந்தார்.
உதயநிதி சொத்து மதிப்பு
இந்தநிலையில் உதயநிதியின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது சொத்து விவரங்களை உதயநிதி தாக்கல் செய்துள்ளார். அதில், ஒட்டு மொத்த சொத்து மதிப்பாக 22.53 கோடி என குறிப்பிட்டுளார். 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 600 கிராம் தங்கம் வைத்திருப்பதாவும், வங்கியில் வைப்பு தொகையாக 1.22 கோடியும், இன்சூரன்ஸ் பாலிசிகள் 16 லட்சத்தில் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் பாண்டுகள் மற்றும் பங்குகள் என 7.22 கோடிக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 11 கோடிக்கு கடன் இருப்பதாகவும் தனது சொத்து மதிப்பு விவரங்களை உதயநிதி தெரிவித்துள்ளார்.