- Home
- Tamil Nadu News
- அப்பாக்கு என்ன தான் ஆச்சு? முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து உதயநிதி கொடுத்த அப்டேட்
அப்பாக்கு என்ன தான் ஆச்சு? முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து உதயநிதி கொடுத்த அப்டேட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து ஓய்வில்லாமல் பணியாற்றி வந்த காரணத்தால் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களில் அவர் வீட்டிற்கு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவல் பணிகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான தலை சுற்றல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் அடுத்த 2 நாட்களுக்கு எந்த அலுவல் பணியிலும் ஈடுபடாமல் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
2 நாட்கள் ஓய்வு
இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் முகாமிட்டு முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து முதல்வர் அடுத்த 2 நாட்களுக்கு எந்த அலுவல் பணியிலும் ஈடுபட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரும் நானும்
இதனிடையே முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும்” 2ம் பாக நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், உடல் நலக் குறைவால் அவர் பங்கேற்கவில்லை. முதல்வர் இல்லாமல் நடைபெற்ற இந்த விழாவில் துணைமுதல்வரும், அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் கடந்த 2, 3 மாதங்களாக ஓய்வில்லாமல் பணியாற்றி வந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வீடு திரும்புவது எப்போது?
மேலும் முதல்வருக்கு இன்று சில முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவற்றை முடித்துக் கொண்டு 2 அல்லது 3 நாட்களில் முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.