ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை: விடுபட்ட பெண்களுக்கு புதிய வாய்ப்பு
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பித்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 பெறலாம்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் நடக்கும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
முன்னோடி திட்டங்கள்
"பொருளாதார வளர்ச்சியில் 9.69% உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், விவசாயிகள் பயிர்க் காப்பீடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களைப் பார்த்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டிருக்கிறார். எந்தத் தகவலும் தெரியாமல், அறைகுறைத்தனமாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்" என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடினார்.
ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய முகாம் தொடங்கப்படும். இந்த முகாமில், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரூ.1,000 வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றியையும் தனது உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.