MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக.. அடுக்குமொழியில் பேசி அலறவிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக.. அடுக்குமொழியில் பேசி அலறவிட்ட முதல்வர் ஸ்டாலின்

திமுக 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முல்வர் ஸ்டாலின் ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. ஒரு தி.மு.க.தான்.. இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது என்று பேசினார்.

6 Min read
Velmurugan s
Published : Nov 08 2025, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
திமுக 75ம் ஆண்டு கொண்டாட்டம்
Image Credit : Asianet News

திமுக 75ம் ஆண்டு கொண்டாட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் இளைஞரணி சார்பில் திமுக 75 அறிவுத் திருவிழா என்ற நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பேசயி முதல்வர் மு.க.ஸ்டாலின், “கருப்பு சிவப்புக் கொள்கையைத் தாங்கி, களத்தில் பணியாற்றும் இளைஞரணிப் பட்டாளம் இங்கே கூடியிருப்பதைப் பார்க்கும்போது, திருவள்ளுவர் கோட்டமே திராவிடக் கோட்டமாக மாறி இருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

‘காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு’ எனும் அறிவுக் கருவூலத்தைத் தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்கின்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாட்டின் லட்சியக் கொடியாக விளங்கும் நம்முடைய கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடிக்கு வயது 75 என்பதை முன்னிட்டு வரலாற்றுக் கண்காட்சி, இருநாள் கருத்தரங்கம் - முற்போக்குப் புத்தகக் கண்காட்சி என்று இளைஞரணி முன்னெடுத்திருக்கும் இந்தக் கொள்கைத் திருவிழாவில் பங்கெடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

தி.மு.க.வின் 75 ஆண்டுப் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவிற்கு, "அறிவுத் திருவிழா" என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். கழகத்தைத் தொடங்கியது "அறி"ஞர் அண்ணா! ஐம்பதாண்டு காலம் அதைக் கட்டிக் காத்தவர் முத்தமிழ் "அறி"ஞர்! கழகத்தின் முதல் தலைமையகம் பெயர் "அறி"வகம்! தலைவர் கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் "அறி"வாலயம்'! இவ்வாறு, அறிவை மையப்படுத்தி, அறிவொளியைப் பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரும் கட்சியின் 75-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை, 'அறிவுத் திருவிழா' என்று சொல்லாமல், வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்?

26
திமுகவின் வெற்றி வரலாற்று சாதனை
Image Credit : F/mk stalin

திமுகவின் வெற்றி வரலாற்று சாதனை

உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்தக் கோட்டத்தில், தலைவர் கலைஞர் விரும்பிய அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள, இளைஞர் அணிச் செயலாளர் ‘கொள்கை இளவல்’ தம்பி உதயநிதி அவர்களையும் - அவருக்குத் துணை நிற்கும் இளைஞரணி தம்பிமார்களையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்! தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்!

கடந்த ஒரு மாத காலமாக, இந்த அறிவுத் திருவிழாவிற்கான பணிகளில் தம்பி உதயநிதி அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார் என்று முரசொலியில் செய்திகள் வந்துகொண்டே இருந்தது... நானும், “சரி, அப்படி என்னதான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று காத்துக் கொண்டிருந்தேன்... எதையும் இடையில் கேட்கவில்லை. இப்போது இந்த அறிவுத் திருவிழாவைப் பார்த்த பிறகு சொல்கிறேன், “என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்வதைவிட, நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!”. வள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்கிறேன்... தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்புமிக்க செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அய்யன் வள்ளுவர் சொன்னாரே, “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்!” என்ற குறளுக்கேற்ப தம்பி உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையுடன் சொல்கிறேன். அந்தப் பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். ஏன் என்னுடைய அன்புக்கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத்திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும். நிச்சயம் இளைஞரணி இதைச் சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-இல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். "ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்" என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள்! எத்தனை பத்திரிகைகள்! எத்தனை புத்தகங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை கொள்கை வகுப்பெடுக்கும் நாடகங்கள், திரைப்படங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை சிறைவாசங்கள்! எத்தனை தியாகங்கள்! எத்தனை துரோகங்கள்! தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல!

சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை!

Related Articles

Related image1
கமல்ஹாசனின் பர்த்டே பார்ட்டி... பேமிலியோடு ஆஜரான முதல்வர் மு.க.ஸ்டாலின். - வைரலாகும் போட்டோஸ்
Related image2
தம்பி உதயநிதி..! மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்..! அதிர்ந்த அரங்கம்..!
36
ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்!
Image Credit : Asianet News

ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்!

இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வைப் போன்று வெற்றி பெற, தி.மு.க.வைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்! இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது!

இந்த வரலாற்றையும் - நம்முடைய கொள்கைகளையும் - தம்பி உதயநிதி இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததால்தான், இளைஞரணிச் செயலாளராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து, லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்! அவர்களுக்குப் பாசறைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்! முரசொலியின் கடைசிப் பக்கத்தை பாசறைப் பக்கமாக மாற்றினார்! கொள்கைகளைப் பரப்ப முத்தமிழறிஞர் பதிப்பகத்தைத் தொடங்கினார்! தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறக்கிறார்! உங்களைப் போன்ற இளம் பேச்சாளர்களை உருவாக்குகிறார்! இப்போது, இந்த அறிவுத் திருவிழா மூலமாக, இளம் எழுத்தாளர்கள் – ஆராய்ச்சியாளர்கள் என்று உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்! இதுதான், தந்தை பெரியார் செய்த பணி! பேரறிஞர் அண்ணா செய்த பணி! தலைவர் கலைஞர் செய்த பணி! நான் விரும்பும் பணி! இதை உதயநிதி செய்வதால், தந்தை என்பதைவிட, இந்த இயக்கத்தின் முதன்மைத் தொண்டன் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும், “காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு” புத்தகத் தலைப்பிலேயே, நம்முடைய இயக்கம் எத்தகைய மாபெரும் அறிவுக் கரூவூலமாக - கொள்கைத் தீரர்களின் கோட்டமாக இருக்கிறது என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்! நம்முடைய 75 ஆண்டுகால வரலாற்றையும் - சாதனைகளையும், 1,120 பக்கங்களில் தம்பி உதயநிதி உருவாக்க துணை நின்ற, ஆலோசனை வழங்கிய நம்முடைய மதிப்பிற்குரிய சிந்தனைக் கருவூலம் ஐயா க. திருநாவுக்கரசு அவர்கள், ஊடகவியலாளர்கள் திருமாவேலன் அவர்கள், விஜயசங்கர் அவர்கள், கோவி.லெனின் அவர்கள்… தொகுப்பாசிரியர்கள் செந்தில், சுகுணா திவாகர், நீரை மகேந்திரன், பிரகாஷ், கௌதம்ராஜ், பன்னீர் பெருமாள் என எல்லோரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

46
சமூக நீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்
Image Credit : Asianet News

சமூக நீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்

திராவிட இயக்கத்திற்கு சார்பானவர்கள் மட்டுமல்ல, திராவிட இயக்கத்திற்கு வெளியில் இருந்து செயல்படுகிறவர்களும், திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்களும் கூட கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இத்தனை கட்டுரையாளர்கள் பார்வையில், இப்படி ஒரு புத்தகம் உருவாகுவது மிகவும் சிறப்பு! இந்தப் புத்தகத்தை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்!

இந்த நேரத்தில், இளைஞரணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்... இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை, காலத்திற்கு ஏற்ற மாதிரி, வீடியோக்களாக மாற்றி, சோஷியல் மீடியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்னை சோனியா காந்தி முதல் - அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும், தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதியிருக்கிறார்கள்! ஒரு மாநிலக் கட்சியை, அகில இந்தியத் தலைவர்களும், மற்ற மாநிலத் தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்துவிடாது! முக்கியமான தலைவர்கள் நம் இயக்கம் பற்றிச் சொன்ன கருத்துகளில் ஹைலைட்டாக ஒரு வரியை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், என் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள், “ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்” என்று சொல்லியிருக்கிறார். மதிப்பிற்குரிய லாலு பிரசாத் அவர்கள், “சமூகநீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்” என்று பாராட்டியிருக்கிறார். மதிப்பிற்குரிய சரத் பவார் அவர்கள், “கூட்டாட்சியின் வலிமையான பாரம்பரியம்” என்று சொல்லியிருக்கிறார். மதிப்பிற்குரிய சி.பி.ஐ. தேசிய செயலாளர் டி. ராஜா அவர்கள், சமத்துவத்தின் முகமாக நம்மை பார்க்கிறார். மதிப்பிற்குரிய பரூக் அப்துல்லா அவர்கள், “மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்காகப் பயணிப்பவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்! அன்புக்குரிய சகோதரர் அகிலேஷ் அவர்கள், “எங்களுக்கும் தி.மு.க.விற்கும் இருப்பது லட்சியங்களுக்கான உறவு” என்று சொல்லியிருக்கிறார். பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக விரைவில் வர இருக்கக் கூடிய, நாம் எதிர்பார்த்திருக்க கூடிய சகோதரர் தேஜஸ்வி அவர்கள், நம்மை ஜனநாயகத்தின் தோழனாகப் பார்க்கிறார். மரியாதைக்குரிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், “அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்ட நினைக்கும் இயக்கம்” என்று சொல்கிறார்.

56
SIRஐ ஏன் அவசரமாக நடத்த வேண்டும்..?
Image Credit : Asianet News

SIRஐ ஏன் அவசரமாக நடத்த வேண்டும்..?

இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது! இந்தச் சாதனைகளும் - வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது! நாம் பேசும், சமூகநீதி - சுயமரியாதை - மாநில சுயாட்சி - கூட்டாட்சி - ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

எனவே, நான் பெருமையுடன் சொல்கிறேன்... இந்த அறிவுத் திருவிழா, “திராவிடம் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா! இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், வெறும் தி.மு.க. புத்தகங்களையும் திராவிட இயக்கப் புத்தகங்களையும் மட்டும் வைக்காமல், பொதுவுடைமை இயக்கப் புத்தகங்கள் - அம்பேத்கரியப் புத்தகங்கள் - பெண்ணியப் புத்தகங்கள் என்று அனைத்து வகைப்பட்ட அரசியல் புத்தகங்களுக்கும் களமாக, முற்போக்குப் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்! முற்போக்கு கருத்துகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களை எழுச்சி பெற வைப்பது என்ற தந்தை பெரியார் செய்த பணியை நீங்கள் தொடர்ந்து செய்வது பெருமையாக இருக்கிறது!

இங்கு இருக்கும் இளைஞரணித் தம்பிமார்களைப் பார்க்கிறபோது, இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும் - எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது! கொள்கைரீதியாகத் தி.மு.க.வை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்! அதுதான், S.I.R.

ஏன் இந்த S.I.R-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்? இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், தேர்தல் ஆணையம் S.I.R. பணிகளை தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராகச் சட்டரீதியாகவும் – அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம், தொடர்ந்து போராடப் போகிறோம், போராடுவோம், அது வேறு!

66
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்..
Image Credit : ANI

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்..

இந்த நேரத்தில், இளைஞரணித் தம்பிமார்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும்!

நம் இயக்க வரலாறு முழுவதுமே போராட்ட வரலாறுதான்! நம்முடைய போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கொள்கைத் திருவிழாதான், இந்த அறிவுத் திருவிழா! முற்போக்கு விழாவாக, கருப்பு - சிவப்பு - நீலம் - சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது! இந்தியாவின் ஜனநாயகத்தையும் - தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க – 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும்! “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்!” தந்தை பெரியாரின் - பேரறிஞர் அண்ணாவின் - தலைவர் கலைஞரின் - இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் - கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்று பேசினார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
அரசியல்
தேர்தல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved