- Home
- Tamil Nadu News
- சென்னை மெட்ரோ பயண அட்டை தொலைந்துவிட்டதா? பேலன்ஸ் தொகை மாற்ற முடியுமா? மெட்ரோ விளக்கம்
சென்னை மெட்ரோ பயண அட்டை தொலைந்துவிட்டதா? பேலன்ஸ் தொகை மாற்ற முடியுமா? மெட்ரோ விளக்கம்
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தொலைந்து போன மெட்ரோ பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் உள்ள இருப்புத் தொகையை வேறு அட்டைக்கு மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது என அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன. அதாவது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கப்படுகின்றன. நீலவழித்தடம் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மற்றும் பச்சை வழித்தடம் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை இயக்கப்படுகின்றது. குறிப்பாக மழைக்காலங்களில் கடும் போக்குவரத்து சிக்கி தவிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டுக்கு செல்ல முடிகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் மெட்ரோ பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் தொலைந்து விட்டால் அந்த அட்டையில் இருக்கும் இருப்பு பணத்தை மாற்ற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள இருப்பு தொகையை வேறு பயண அட்டைக்கு மாற்ற இயலாது. தொலைந்துபோன மெட்ரோ இரயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் (CMRL Stored Value Cards and Singara Chennai (NCMC) Cards) மீதமுள்ள தொகையை எந்தச் சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றப்படவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. இதனால் பயணிகள் தங்கள் அட்டைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக, தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை RBI/NPCI வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது. ஏனெனில் ஒரு அட்டை தொலைந்தால் அது வேறு ஒருவரால் தவறாக பயன்படுத்தபட வாய்புள்ளது. அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை சென்னை மெட்ரோ இரயில் வழங்கி வருகிறது.
இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம், மேலும் மேம்பட்ட அமைப்புகளை நோக்கி நாங்கள் செயல்படும்போது, பயணிகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் கருத்துக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என கூறியுள்ளனர்.

