- Home
- Tamil Nadu News
- முடியவே முடியாது.. ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு.. இதுதான் காரணம்!
முடியவே முடியாது.. ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு.. இதுதான் காரணம்!
தமிழக அரசின் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு சொன்ன காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு மீண்டும் மறுப்பு
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு உள்ளது. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் ஓசூர் தொழில்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு சொன்ன காரணம்
அதாவது ஓசூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை மத்தி அரசு மறுத்துள்ளது. ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி பெங்களூருவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ராணுவ விமானங்கள் மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதே வான் பரப்பில் பயணிகள் விமானத்தை அனுமதிப்பது இயலாத காரியம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
150 கிமீக்குள் புதிய விமான நிலையம் கூடாது
தமிழக அரசு ஓசூர் விமான நிலையத்துக்காக ஏற்கெனவே அனுமதி கேட்டபோது இதே காரணத்தை தான் மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இப்போது மீண்டும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று மத்திய அரசு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுவும் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
மறுபக்கம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு
இது ஒருபக்கம் இருக்க, ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் சுமார் 2,300 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் விளை நிலங்களை விட்டுத்தர முடியாது என சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

