- Home
- Tamil Nadu News
- குடிமகன்களுக்கு குட்நியூஸ்! அரசே காசு கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! அரசே காசு கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
TASMAC Shop: சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், டாஸ்மாக் நிறுவனம் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சென்னையில் இன்று முதல் அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி, மதுபாட்டில் வாங்கும்போது கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வந்து விட்டால் மது விற்பனை இரட்டிப்பாகும்.
காலி மதுபாட்டில்
ஒட்டுமொத்தமாக தமிழத்தில் மது விற்பனையை சராசரியாக கணக்கெடுத்தால் தினந்தோறும் 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதுபாட்டில்களை குடிமகன்கள் குடித்துவிட்டு மலைவாசஸ்தலங்கள், வனப்பகுதிகளில், காடுகளை வீசி செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
ரூ.10 வழங்கும் திட்டம்
அதுமட்டுமல்லாமல் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து காலி மதுபான பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம் முதல் கட்டமாக நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதியில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தனர்.
டாஸ்மாக் விற்பனையாளர்கள் எதிர்ப்பு
ஆனால், இதற்கு டாஸ்மாக் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டில்களை சேகரிக்க, புதிய நபர்கள் வேண்டும், ஏற்கெனவே தங்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ளதால் தங்களால் அவற்றை செய்ய முடியாது என்று விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் சென்னையில் இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் அமல்
இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: டாஸ்மாக் லிட்., சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாகப் பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும் என கூறப்பட்டுள்ளது.

