புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மலுக்கு ஷாக்.! முன் ஜாமின் வழக்கில் பரபரப்பு திருப்பம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல புஸ்ஸி ஆன்ந்த், சிடி நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் ஜோதிராமன் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முன் ஜாமின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆதரவாக வழக்கறிஞர் வாதிடுகையில், கரூர் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல விபத்து எனவும் இந்த சம்பவத்தில் எஃப் ஐ ஆர் தவறான தகவலை போலீசார் பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் எங்களுடைய தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லையெனவும், கரூர் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல நடந்தது விபத்து என வாதிடப்பட்டது. வேண்டுமென்றே மக்களை காக்க வைத்து தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது.
விபத்துகளை விபத்தாக பார்க்க வேண்டும் அதற்காக பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும். கரூர் கூட்டத்திற்கான இடம் தேர்வு தொடர்பாக ஒரு நாளுக்கு முன்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வந்த போது வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை.
எனவே கூட்டத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பு முழுக்க அரசுக்கு உள்ளது என வாதிடப்பட்டது. ஒட்டுமொத்த மக்கள் கூடியிருந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தியதால் தான் நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்குள் காலியான ஆம்புலன்ஸ் வந்ததால் மேலும் கூட்டம் அதிகரித்தாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எந்தவித சாட்சிகளும் ஆவணம் இல்லாமல் இவ்வாறு மட்டும் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தங்களது கருத்தை முன்வைத்த அரசு தரப்பு புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தான் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தனர். பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டது மதியம் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தான். ஆனால் மதியம் 12 மணிக்கே பிரச்சாரம் செய்ய விஜய் வருகிறார் என விளம்பரம் செய்துள்ளனர். பொதுமக்களே முன்கூட்டியே வரவழைத்தது இந்த 2 பேர் தான் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் போலீசாரின் நிபந்தனையை மீறி விஜய் வரும் வழியெங்கும் ரோடு ஷோ நடத்தியுள்ளார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரோடு ஷோ நடத்திருந்தால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கையில் மக்கள் அதிக அளவு கூடியுள்ள நிலையில் கூட்டத்தை ரத்து செய்தால் மேலும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவே நிகழ்ச்சியை அரசு ரத்து செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் பெரும்பாலனோர் நீர் சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடி நிர்மல்குமாரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் காரணமாக எந்த நேரத்திலும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடி நிர்மல் குமார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.