- Home
- Tamil Nadu News
- மக்களுக்கு சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி.? இருட்டுக்கடை சென்று சோதித்த ஸ்டாலின்.! விளாசும் அண்ணாமலை
மக்களுக்கு சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி.? இருட்டுக்கடை சென்று சோதித்த ஸ்டாலின்.! விளாசும் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை பழனிக்கு காவடி எடுத்துச் சென்றபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தைப்பூச வாழ்த்து விவகாரம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

மக்களுக்கு சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி.? இருட்டுக்கடை சென்று சோதித்த ஸ்டாலின்.! விளாசும் அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக செருப்பை கழட்டி வைத்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவங்கினார். இதனையடுத்து 48நாட்கள் விரதம் நிறைவு செய்யும் வகையில் பழனி கோவிலுக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
இதனையடுத்து அண்ணாமலை காவடி சுமந்தபடி அடிவாரம் பாத விநாயகர் கோவில் படிவழிப் பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டிஎஸ்பி நமச்சிவாயம் என்பவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினார்.
தடுத்து நிறுத்திய போலீஸ்
காவடியுடன் மலைக்கோவிலுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தார். மேலும் படிவழிப் பாதை வழியே பக்தர்கள் இறங்கி வரும் வழி என்பதால் குடமுழுக்கு நினைவரங்கம் வழியே மேலே செல்லுமாறு தெரிவித்தார். அப்போது டிஎஸ்பி மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து படிவழி பாதையில் அண்ணாமலை உடன் 5 பேர் மட்டும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படிப்பாதை வழியே அண்ணாமலை மலைக்கோவிலுக்கு மேலே சென்றார். இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
வாழ்த்து சொல்லாத முதலமைச்சர்
அப்போது அவர் கூறும் போது, தைப்பூசத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரியதல்ல என்றும், வாழ்த்து தெரிவித்தது சந்தோசம் என தெரிவித்தார். பிரான்சில் இருந்து கொண்டு பாரதபிரதமர் மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி கவலை இல்லை தாங்கள் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனையை தீர்க்கும் வகையில்அரசியல் செய்கிறோம்.
அல்வா கொடுக்கும் ஆட்சி
ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்தான் வியூக நிபுணர்களை அழைத்து அரசியல் செய்தால் மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் தெரிவித்தார். கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நிரந்தர பணி நியமனம், செவிலியர் பணி நியமனம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் சிறப்பாக அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றும்,
மேலும் சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டார் என்றும், இது தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஆட்சி என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.