சூரியனுக்கே டார்ச்..! மில்கி மிஸ்ட் ஓனருக்கே நெய் பாட்டில் கொடுத்த அண்ணாமலை
பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட் நிறுவன இயக்குநரின் மகன் சஞ்சய் திருமண விழாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சுத்தமான நாட்டு மாட்டு நெய்யை பரிசாக கொடுத்தது கவனம் ஈர்த்துள்ளது.

ஈரோட்டில் இருந்து தொடங்கிய மில்கி மிஸ்ட்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் அத்தியாவசிய உணவுப்பொருளாக பால் உள்ளது. பால் மட்டுமல்லாது பால் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் பால் பொருட்கள் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக மில்கி மிஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தின் ஈரோட்டில் இருந்து தான் விரிவடைந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஆம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொடங்கப்பட்ட மில்கி மிஸ்ட் நிறுவனம் தான் தற்போது உலகின் பல நாடுகளில் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
ரூ.2500 கோடி சாம்ராஜ்யம்
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர், நெய், தயிர், சீஸ், ஐஸ்கிரீம், பால் பவுடர் உள்ளிட்ட பல பொருட்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ஆண்டுக்கு ரூ.2500 கோடி அளவுக்கு வணகம் செய்கிறது. இந்த நிறுவனத்தின் சேர்மனாகவும், மேலாண்மை இயக்குநராகவும் சதீஷ்குமார் செயல்படுகிறார். இவரது மகன் TS சஞ்சய், S.மித்ரா தம்பதியின் திருமணத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தம்பதிக்கு சுத்தமான நாட்டு மாட்டு நெய்யை பரிசாக வழங்கியது கவனம் ஈர்த்துள்ளது.
சுத்தமான நாட்டு மாட்டு நெய்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “"மில்கி மிஸ்ட்" நிறுவனத்தின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான திரு. சதீஷ்குமார் அவர்களின் மகன் செல்வன் T.S.சஞ்சய் - செல்வி S.மித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்லுறவுகள் சூழ இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள் இருவரும் இறைவனின் அருளோடு எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

