- Home
- Tamil Nadu News
- TVKவில் செங்கோட்டையன்.. இனி அதிமுகவுக்கு 20% ஓட்டு கூட கிடைக்காது.. மூத்த பத்திரிகையாளர் பகீர்
TVKவில் செங்கோட்டையன்.. இனி அதிமுகவுக்கு 20% ஓட்டு கூட கிடைக்காது.. மூத்த பத்திரிகையாளர் பகீர்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தவெகவுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிமுகவுக்கு 20% வாக்கு கிடைப்பதே கடினம் தான் என மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

தவெகவில் செங்கோட்டையன்..?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாக செய்திகள் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. மேலும் இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்ற, தாழ்வுகளை சந்தித்த நிலையில் அதிமுக என்ற இயக்கத்திற்காக நான் தொடர்ந்து உழைத்தேன்.
மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன்..
ஆனால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு உறுப்பினராகக் கூட இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் என்னை நீக்கி உள்ளனர். இந்த மனவேதனை அனைவருக்கும் நன்றாக தெரியும். இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டு கடந்து சென்றார். மாறாக தவெகவில் இணையப்போகிறீர்களா என்ற கேள்விக்கு எந்தவித மறுப்பும் அவர் தெரிவிக்கவில்லை என்பதால் அவர் விஜய்யுடன் இணைவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
அதிருப்தி அதிமுகவினரை தவெகவுக்கு அழைத்துச்செல்லும் செங்கோட்டையன்
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “தவெகவில் செங்கோட்டையன் இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் விஜய்யின் கை ஓங்கும். மேலும் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அதிருப்தி அதிமுக உறுப்பினர்களை தவெகவில் இணைக்கும் பணியை செங்கோட்டையன் மேற்கொள்வார்.
அதிமுகவுக்கு 20% வாக்கு கூட கிடைக்காது
தவெகவில் தலைவர் விஜய்யாக இருக்கலாம். ஆனால் அக்கட்சியின் தந்தை என்ற வடிவத்தில் இருப்பவர் புஸ்ஸி ஆனந்த் தான். செங்கோட்டையனுக்கு, புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பொறுப்பு வழங்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்டபோது அவர்கள் 7 சதவீத வாக்குகளை இழந்தார்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய பின்னர் 13 விழுக்காடு வாக்குகளை இழந்து வெறும் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றனர்.
தற்போது செங்கோட்டையன் வெளியேறியதால் 20 விழுக்காடு வாக்குகள் கூட அவர்களுக்கு கிடைப்பது கடினம் தான். இந்த சதவீதம் மேலும் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

