திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த திரை பிரபலங்கள்
இந்தியாவில் பல முன்னணி நடிகர்கள் அரசியலில் கால் பதித்துள்ளனர். சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து சினிமா புகழை அரசியலுக்கு பயன்படுத்தி வெற்றவர்கள் யார், தோற்றவர்கள் யார்? என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்..
Vijay
‘தளபதி’ விஜய் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரம். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். 2026 இல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விஜய் தயாராகி வருகிறார். உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மாநில அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும் தனது புகழைப் பயன்படுத்திக் கொள்ள விஜய் இலக்கு வைத்துள்ளார். விஜயின் அரசியல் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
ஸ்மிருதி இரானி
“கியோங்கி சாஸ் பீ கபி பாஹு தி” என்ற தொலைக்காட்சித் தொடரில் ஸ்மிருதி இரானி நடித்த கதாபாத்திரம் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. தொலைக்காட்சியில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ஜவுளித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால் பாஜகவில் தொடர்ந்து செயல்படும் அரசியல்வாதியாக உள்ளார்.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் (MNM) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் தனது கட்சி மூலம் சமூக நீதி, சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தினார். அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அவரது கட்சி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசனும் தோல்வியடைந்தார்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று தெரிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார். ரசிகர்கள் போராட்டம் நடத்தியும் முடிவு மாறவில்லை.
சிரஞ்சீவி
மெகாஸ்டார் சிரஞ்சீவி 2008 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரஜாராஜ்யம் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே சிரஞ்சீவி தனது பி.ஆர்.பி கட்சியை இந்திய தேசிய காங்கிரசில் இணைத்தார். காங்கிரஸ் அரசில் சுற்றுலாத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார். தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார்.
கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத்தும் இந்திய சினிமாவில், குறிப்பாக பாலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பாஜகவில் இணைந்த அவர், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுரேஷ் கோபி
மலையாள திரைஉலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த சுரேஷ் கோபி அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்ற ஒரே தொகுதி திருச்சூர் தான். இதனைத் தொடர்ந்து சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக்கப்பட்டு உள்ளார்.
ரோஜா
1990களில் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த ரோஜா 1998ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிர கட்சி பணி ஆற்றினார். அதன் விளைவாக 2014ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இறுதியாக கடந்த 2 ஆண்டுகள் அமைச்சரவையில் இடம் பெற்ற ரோஜாவுக்கு விளையாட்டு துறை மற்றும் சுற்றுசூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.