ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வா? உண்மை நிலவரம் என்ன?
சமூக வலைத்தளங்களில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டதாக பரவிய செய்திக்கு ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆவின் பால்
தமிழகத்தில் ஆவின் பால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்கி வருகின்றனர். சந்தானது மட்டுமின்றி குறைந்த விலையில் கிடைப்பதாலும் பெரும்பாலன மக்கள் ஆவின் பால் வாங்குகின்றனர், அந்த வகையில் பல நிறங்களில் கொழுப்பு சத்தின் அளவை பொறுத்து ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது ஆவின் பால் உயர்த்தப்பட்டு வருகிறது.
லிட்டருக்கு ரூ.6 உயர்வு
இந்நிலையில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாமல் அதற்கு பதிலாக ஆவின் பால் விலை இருமடங்கு அதாவது லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆவின் நிர்வாகம் விளக்கம்
இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 இலட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலையில் எந்த மாற்றமும் இல்லை
ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

