என்னடா கொடுமை இது.! ஜிஎஸ்டி பற்றி கேட்டதற்கு இப்படி செய்துவிட்டாரே நிர்மலா சீதாராமன்
கோவையில் ஜிஎஸ்டி குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிரபல ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் நகைச்சுவையாக புலம்பியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நிர்மலா சீதாராமன் ஆலோசனை கூட்டம்
மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன், இவர் பல்வேறு மாநிலங்களில் தொழில் துறை வளர்ச்சி, வங்கி கடன், ஜிஎஸ்டி உள்ளிட்டவைகள் தொடர்பாக தொழில் துறையினரிடம் ஆலோசனை மேற்கொள்வார். அப்போது கடன் கிடைப்பதில் பிரச்சனை, ஜிஎஸ்டி போன்றவைகள் தொடர்பாக கடை உரிமையாளர்கள் முறையிடுவார்கள். அதற்கு தேவையான நடவடிக்கையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொள்வார். கடந்த முறை இதே போல வங்கியில் கடன் வழங்கும் திடத்தில் கலத்து கொண்டு பேசிய போது சிறு குறு தொழில் முதலீடு செய்பவர் வங்கியில் கடன் கொடுப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்.
Nirmala Sitharaman in kovai
கடன் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க
ஆனால் தற்போது எந்த கடனும் வழங்குவதில்லை. இது தொடர்பாக பல முறை வங்கியிடம் முறையிட்டேன் ஆனால் எந்த வித பதிலும் கிடைக்கவில்லையென மேடையிலையே விமர்சனம் செய்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் இதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவையில் தொழில்துறையினருடன் நேற்று முன்தினம் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் ஜி.எஸ்.டி தொடர்பாக புகார் தெரிவித்தனர். ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். அப்போது கோவையில் மிகவும் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டியில் ஏற்படும் பிரச்சனைகளை அமைச்சரிடம் புலம்பினார். இதனை நகைச்சுவையாக பேசினார்.
Nirmala Sitharaman
கிரீமுக்கு ஒரு வரி, பன்னுக்கு ஒரு வரி
அப்போது பேசிய அவர், பன்னுக்கு ஜி.எஸ்.டி இல்லை, ஆனால், அதுக்குள்ள வைக்குற கிரீம்க்கு 18% ஜி.எஸ்.டி வரி போடப்படுகிறது. இதனால் ஓட்டலில் சாப்பிட வரும் கஸ்டமர் பன்னு மட்டும் கொண்டுவாங்க, நாங்களே சீனி, ஜாம் எல்லாம் நாங்களே போட்டுக்கொள்கிறோம் என சொல்கிறர்கள் என நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் (வானதி சீனிவாசன்) எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் அவர்கள் சண்டை போடுகிறார்கள்,
இனிப்புக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி, காரத்துக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி, ஒரே குடும்பத்துல இத்தனை வகையா ஜி.எஸ்.டி போட்டா கடை நடத்த முடியல மேடம். அதனால், கம்யூட்டரே குழம்பி விடுகிறது.
nirmala sitharaman
கிண்டலடித்த நெட்டிசன்கள்
எனவே இந்த ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள், ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகளும் குழம்புகிறார்கள்' என அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் நகைச்சுவையாகப் பேசியிருந்தார். இந்த பேச்சு தொலைக்காட்சி, சமூக வலைதளம் என அனைத்திலும் செம வைரலானது. நெட்டிசன்கள் நிர்மலா சீதாராமனை கிண்டலடித்தனர்.
மறைமுகமாக நோஸ்கட் செய்துவிட்டதாக அந்த வீடியோவை பிரபலப்படுத்தினர். இதனிடையே இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்களின் பிரச்னையை மக்களுக்கு புரியும் படி சாதாரண மொழில் பேசியிருந்தார். அதில் எந்த தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார்.எனவே அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
மன்னிப்பு கேட்டாரா.?
இந்த நிலையில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறார். இந்த வீடியோவில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என சரியாக கேட்காதவகையில் ஆடியோ உள்ளது. ஆனால் நான் எந்த கட்சியும் சார்ந்தவன் இல்லையென உட்கார்ந்திருந்தவர் எழுந்து நின்று மன்னிப்பு கேட்பது மட்டும் தெளிவாக உள்ளது.