வெள்ளியங்கிரி மலையேற திட்டமா.? பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
பிப்ரவரி முதல் மே வரை வெள்ளியங்கிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர், உடல்நலக் குறைபாடு உள்ளோர், குழந்தைகள் மலையேற கூடுதல் கவனம் தேவை. மருத்துவப் பரிசோதனைக்குப் பின் மலையேறவும், குழுவாகச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலையேற திட்டமா.? பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் இருந்தும் மலையேற வருவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மலையேறிய பலர் அடுத்தடுத்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து இந்தாண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க்ப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
இதன் படி இந்தாண்டிற்கான மலையேற்றம் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்களுக்கு வனத்துறை சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், இதயம், நுரையீரல் பாதிப்பு, ரத்த சோகை உள்ளவர்கள், குழந்தைகள், மலையேற்ற பயணத்தின் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாமில் பரிசோதனை கட்டாயம்
வெள்ளியங்கிரி மலையேறும் போது பக்தர்கள் தனித்தனியாக செல்லாமல், குழுவாக செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மலையேற வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
தேவைப்படும் குடிநீர், உணவு, மருந்துபோன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும் எனவும், மலேயேற்றப்பகுதிகளில் அதிகளவு குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலையேற்றத்தை தொடர கூடாது
வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல், தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றுதல், உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் மலையேற்றத்தை தொடராமல் உடனடியாக மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையேற வரும் பக்தர்கள், வனப் பகுதியின் சுற்றுச்சூழலை கெடுக்கும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்லக்கூடாது என பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.