- Home
- Tamil Nadu News
- மீண்டும் குறைந்த தக்காளி விலை..! கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் குறைந்த தக்காளி விலை..! கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை எவ்வளவு தெரியுமா.?
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது தக்காளி விலை குறைய தொடங்கியுள்ளது. மொத்த விற்பனையில் 160 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 180 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை
தக்காளி இல்லாத சமையல் செய்ய முடியாது ஆனால் தற்போது உள்ள நிலையில் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என புதிய வகை உணவுகளை இல்லத்தரசிகள் சமைக்க கற்று கொண்டு வருகின்றனர். அதற்கு காரணம் தங்கத்தை போன்று தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரிப்பது தான் முக்கிய காரணமாகும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த சில நாட்களில் 50 ரூபாயை தொட்ட தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களாக 100 ரூபாயை தாண்டியது. நேற்று முன் தினம் 200 ரூபாயை தொட்டு பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய பொதுமக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் தக்காளியை கீழே கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகள் தக்காளிக்கு பதிலாக மாற்று விவசாயத்தை செய்ய தொடங்கி விட்டனர். அதன் காரணமாகவே தக்காளி உற்பத்தி குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வறட்சியும் மற்றும் எதிர்பாராத மழையும் தக்காளி பயிரிடுவதில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
ஒரு கிலோ தக்காளி விலை எவ்வளவு.?
மேலும் கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 350டன் தக்காளி மட்டுமே வந்தது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் இன்று கோயம்பேடு சந்தைக்கு 400 டன் தக்காளி வந்ததையடுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் குறைந்து மொத்த விற்பனையில் 160 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 180 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.