ஊட்டிக்கு சுற்றுலா வந்த பேருந்தில் நள்ளிரவில் தீ விபத்து.! 57 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பியது எப்படி?
ஊட்டிக்கு சுற்றுலா வந்து திரும்பிக்கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 57 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 57 மாணவர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு மீண்டும் இரவு பேருந்தில் நாமக்கல் திரும்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது பேருந்தின் வலது பின்புற டயரில் தீ பற்றியுள்ளது.
ஆனால், இதை கவனிக்காமல் ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை இயக்கினார். அப்போது பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக இயக்கி பேருந்தை முந்தி சென்று ஓட்டுநரிடம் தீ விபத்து குறித்து தெரிவித்துள்ளார். உடனே ஓட்டுநர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாணவர்களை அலறியபடி ஓட்டுநர் எழுப்பியுள்ளார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் எழுந்து அலறி கூச்சலிட்டபடியே அவசர அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளெவன பேருந்து முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறைியனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும், பேருந்து முற்றிலும் சேதமானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.