மெரினா பீச்சில் பானிபூரி சாப்பிட்ட இளம்பெண்.. ரயிலில் வாந்தி எடுத்து திடீர் மரணம்.. கதறிய துடித்த தோழிகள்..!
சென்னை மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் வாங்கி சாப்பிட்டு விட்டு ரயிலில் பயணித்த போது வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக கடலூரை சேர்ந்த மோனிஷா(24) நேற்று தனது தோழிகளுடன் சென்றுள்ளார். அப்போது, மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் உள்ளிட்ட சில தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் திருவல்லிக்கேணியில் இருந்து பறக்கும் ரயிலில் திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ரயில் மயிலாப்பூர் நிலையம் அருகே வந்த போது திடீரென மோனிஷா வாந்தி எடுத்துள்ளார். வாந்தி எடுத்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனால், பதறிப்போன மோனிஷாவின் தோழிகள் அலறி கூச்சலிட்டு அழுது கதறியுள்ளனர். அவருடன் வந்திருந்த தோழிகளில் ஒருவர் செவிலியர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
police
மெரினாவில் சாப்பிட்ட உணவு தின்பண்டங்களால் உயிரிழந்தாரா? மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மோனிஷா பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.