Chennai Rain: இடி, மின்னலுடன் சென்னை மக்களை அலறவிட்ட கனமழை.. புறநகரையும் விட்டு வைக்கவில்லை..!
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூரில் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அதேபோல், புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், மதுராந்தகம், சோழிங்கநல்லூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பெய்த மழையால் சென்னையில் இதமான சூழல் நிலவி வருகிறது.