சென்னையில் பங்களா வீட்டில் பயங்கர தீ விபத்து! தம்பதி உடல் கருகி பலி!
சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டின் பூஜை அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு பங்களா
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் 4வது தெருவில் உள்ள சொகுசு பங்களாவில் ஆடிட்டர் ஸ்ரீராம் என்பவர் தனது மனைவி, மகன்கள் மற்றும் தாய் தந்தையுடன் வசித்து வந்தார். இன்று காலையில் வேலை விஷயமாக ஸ்ரீராமின் மனைவி வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் ஸ்ரீராம் மற்றும் அவரது தந்தை நடராஜன், தாய் தங்கம் ஆகியோர் இருந்துள்ளனர்.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களில் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தம்பதி பலி
இந்த தீ விபத்தில் நடராஜன் மற்றும் தங்கம் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஸ்ரீராம் என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது மகன் சரவணன் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பித்தனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்கொண்டு வந்தனர். இதனையடுத்து உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டின் பூஜை அறையில் இருந்து தான் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் வயதான தம்பதி உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.