இ-பதிவு முறையால் அடுத்த சிக்கல்... சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்...!
இ- பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தேவையில்லாமல் வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் நேற்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளவும், மாவட்டத்திற்கு வெளியே பயணிக்கவும் இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பணிகளான திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர் தேவைகள் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்களை சமர்பித்து இ-பதிவு மூலம் அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.
eregister.tnega.org என்ற இணைய பக்கத்தில், ஆவணங்களுடன் பதிவு செய்து, அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி இ-பதிவு நடைமுறைகளுக்காக சென்னை நேற்று முதல் 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளேயே மக்களை இயங்க வேண்டும், ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை சார்பில் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல கூட இ-பதிவு அவசியம் என்பதால், போலீசார் காலையிலேயே வாகன சோதனையில் இறங்கினர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இ-பதிவு இல்லாத வாகனங்களை சோதனை செய்வதற்காக நிறுத்தப்படுவதால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.