- Home
- Tamil Nadu News
- சென்னை
- கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம்.. பீக்கவர்சில் கூடுதல் ரயிலை இயக்க கோரிக்கை..!
கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம்.. பீக்கவர்சில் கூடுதல் ரயிலை இயக்க கோரிக்கை..!
சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையேயான 4வது ரயில் பாதை சுமார் ரூ.280 கோடி மதிப்பீட்டில் 4 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்குகிறது. இதனால், கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இனி சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி, வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை இடையே மட்டும் பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் புறப்படும். இதுபோல, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து முதல் ரயில் காலை 5.40 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும். 25 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை. ஆனால், வாரத்தின் முதல் நாளான நேற்று அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால், ரயில் நிலையமே கூட்ட நெரிசலால் அலைமோதியது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய ரயில்களிலும் அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரக்கூடிய ரயில்களிலும் பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். மேலும் கடற்கரை, கோட்டை, பூங்கா நகர் ரயில் நிலையங்களில் இருந்து பயணிப்பவர்கள் கூட நேற்று காலை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
கடற்கரை - வேளச்சேரி இடையே 122 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 80 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆகையால், 25 நிமிடத்திற்கு ஒரு சேவை என்ற அளவில் பறக்கும் ரயில்கள் இயக்கப்படுவதை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில்களாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.