சென்னையில் அதிர்ச்சி.. பிரபல தனியார் ஓட்டல் லிப்டில் சிக்கிய ஊழியர்.. இரண்டு துண்டாகி பலி.. நடந்தது என்ன?
சென்னை பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லிப்டில் சிக்கி துப்புரவு பணியாளர் ஒருவர் உடல் இரண்டு துண்டாகி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அனைத்து வசதிகளும் கொண்ட சவேரா நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் துப்புரவு பணி, சமையல் என 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பூரை சேர்ந்த அபிஷேக்(27) என்பவர் நட்சத்திர ஓட்டலில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
வழக்கம் போல் நேற்று மதியம் ஓட்டலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓட்டலின் 7வது தளத்தில் இருந்து 8வது தளத்துக்கு செல்ல அபிஷேக் டிராலியை தள்ளியபடி லிப்டில் ஏற முயன்றார். அப்போது, லிப்ட் சென்சார் சரியாக வேலை செய்யாததால் இளைஞரின் கால் தளத்திற்கும் லிப்ட்டிற்கும் இடையே சிக்கிக் கொண்டது. லிப்ட் மேலே சென்றபோது தூய்மை பணியாளர் அபிஷேக் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வெகு நேரமாக லிப்ட் கீழே இறங்காததால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சென்று பார்த்தபோது தான், அபிஷேக் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு மேனேஜரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் லிப்ட் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததாலும் லிப்ட் சென்சார் சரியாக வேலை செய்யாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.