- Home
- Tamil Nadu News
- சென்னை
- 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை! குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை! குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain in 10 districts of Tamil Nadu
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெயில் கடுமையாக வாட்டியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை என அனைத்து இடங்களிலும் வெயில் வாட்டி வதைத்தது. இதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
இதன்பிறகு வெயிலின் முகம் மீண்டும் கடுமையான நிலையில் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ''தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றும், நாளையும் மிதமான மழை
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல ஜூன் 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெளுத்து வாங்கப் போகும் கனமழை
ஜூன் 10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மாவட்டங்களில் மழை
ஜூன் 11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?
இதேபோல் ஜூன் 12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று வெப்பநிலை உயரக்கூடும்'' என்று கூறப்பட்டுள்ளது.