சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 336 பயணிகள்.. நடந்தது என்ன?
சென்னையில் இருந்து கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 336 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 4:30 மணிக்கு புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 324 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 336 பேர் இருந்தனர்.
அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானி உடனடியாக ஓடுபாதையில் விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இதுதொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் இழுவை வாகனம் மூலம், புறப்பட்ட இடத்துக்கே இழுத்து வந்து நிறுத்தப்பட்டது. சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 336 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.