டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி இமாலய சாதனை! மற்ற வீரர்கள் கிட்ட கூட நெருங்க முடியாது!
டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்தில் இருக்கிறார்.

Virat Kohli New T20 Record: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 221 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய மும்பை அணி 209 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது. 32 பந்தில் 64 ரன்கள் விளாசிய ரஜத் படிதார் ஆட்டநாயகன் விருது வென்றார்.
Virat Kohli, T20 Cricket
இந்த போட்டியில் 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 67 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆர்சிபி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். மேலும் இந்த போட்டியின்போது டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 36 வயதான கோலி தனது இன்னிங்ஸில் 17 ரன்களை எட்டியபோது இந்த மைல்கல்லை எட்டினார்.
டி20 கிரிக்கெட்டில் 13,000 டி20 ரன்கள் மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை எட்டிய ஐந்தாவது பேட்ஸ்மேன் விராட் கோலி ஆவார். மேலும் அதிவேகமாக 13,000 ரன்களை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையும் விராட் கோலி வசம் சேர்ந்துள்ளது. விராட் கோலி தனது 386வது டி20 இன்னிங்ஸில் 13,000 ரன்களை கடந்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் 381 இன்னிங்ஸில் 13,000 ரன்களை எட்டி முதலிடத்தில் இருக்கிறார்.
வான்கடே ஸ்டேடியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை வீழ்த்தி சாதனை படைத்த ஆர்சிபி!
Virat Kohli, IPL
விராட் கோலி இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை கிட்டத்தட்ட 90 இன்னிங்ஸ்களில் முந்தி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் கோலி 360 இன்னிங்ஸ்களில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு இரண்டாவது வேகமான பேட்டராக 12,000 டி20 ரன்களைக் கடந்திருந்தார். இந்தியர்களில், ரோஹித் சர்மா 438 இன்னிங்ஸ்களில் 11,851 ரன்களுடன் டி20 ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி ஏப்ரல் 3, 2007 அன்று டெல்லி அணிக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக இன்டர்-ஸ்டேட் டி20 போட்டியில் அறிமுகமானார். பின்னர் அது சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை என மறுபெயரிடப்பட்டது. அந்த போட்டியில் அவர் 35 ரன்கள் எடுத்தார். இந்திய வீரர்களில் விராட் கோலி அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் டி20 கிரிக்கெடில் ஒன்பது சதங்களை அடித்துள்ளார். அவற்றில் எட்டு ஐபிஎல் போட்டிகளில் வந்துள்ளன.
RCB vs MI, IPL 2025
கோலி இதற்கு முன்பு 2021 ஐபிஎல்லில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்திருந்தார். பாபர் அசாம் மற்றும் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு மூன்றாவது வேகமான பேட்டராக 299 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியிருந்தார். விராட் கோலியின் 13,000 டி20 ரன்களில் 8,000க்கும் மேற்பட்ட ரன்கள் ஐபிஎல்லில் இருந்து வந்துள்ளன. இதுவரை 256 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8,168 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்களும், 57 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி வெளியேற்றிய கோபத்தில் வெறித்தனமாக விளையாடும் முகமது சிராஜ்! புதிய சாதனை!