இவன ஏன் இந்திய அணியில் எடுக்கல... ஆர்சிபி பிளேயருக்காக வக்காலத்து வாங்கிய ஸ்ரீகாந்த்
ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் ஆர்சிபி வீரரை இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பது ஏன் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

Krishnamachari Srikkanth Support RCB Player
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்ப்பிள் கேப் வென்ற வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை ஏன் இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை என்று முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய அவர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான புவனேஷ்வரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது என்று குறிப்பிட்டார். "சீம், ஸ்விங்னு ரெண்டையும் வெச்சு பேட்ஸ்மேன்களை இன்னைக்கும் மிரட்ட புவனேஷ்வரால முடியும். இவ்வளவு நல்ல ஃபார்ம்ல இருக்குற ஒரு வீரர் இந்திய அணியில் இல்லை என்பதை நம்பவே முடியல.
புவனேஷ்வருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?
தன்னோட முதல் ஸ்பெல்லிலேயே ஆட்டத்தை திசை திருப்பும் திறமை அவருக்கு இருக்கு. 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஒரு மோசமான ஸ்பெல் வீசியதுதான், அவர் இந்திய அணியிலிருந்து வெளியேறக் காரணமா அமைஞ்சது. ஆனா, அதுக்கப்புறமும் ஐபிஎல்ல தொடர்ச்சியா நல்லா பர்ஃபார்ம் பண்ணியும், செலக்டர்ஸ் அவரை கண்டுக்காம இருக்குறது ஆச்சரியமா இருக்கு," என்று ஸ்ரீகாந்த் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பர்ப்பிள் கேப் ஹோல்டர் புவனேஷ்வர் குமார்
இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வைத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 17-க்கும் குறைவாகவும், எகானமி ரேட் 7.61 ஆகவும் இருக்கிறது. புவனேஷ்வர் குமார் பவர்-பிளே மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். குறிப்பாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மூன்று ஓவர்கள் பந்துவீசி, வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரொமாரியோ ஷெப்பர்ட் இடம் குறித்து ஸ்ரீகாந்த் அதிருப்தி:
இதே சமயம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், RCB அணியின் தேர்வு குறித்தும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அணியின் ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை பிளேயிங் XI-ல் வைத்திருப்பது குறித்து அவர் காட்டமாகப் பேசியுள்ளார்.
"RCB-யிடம் ஒரு நல்ல பவுலிங் லைன்-அப் இருக்கு. ஷெப்பர்ட் ஒரு 'லக்கி சார்ம்' மாதிரி இருக்கலாம். போன வருஷம் கப் ஜெயிச்சபோது அவர் டீம்ல இருந்தார், இப்பவும் டீம் ஜெயிக்குது. இந்த அதிர்ஷ்டத்தால மட்டும்தான் ஷெப்பர்ட் டீம்ல இருக்கார். அவருடைய பர்ஃபார்மன்ஸை பார்த்து இல்லை," என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இந்த சீசனில் ஷெப்பர்ட் 14.50 என்ற மோசமான எகானமி ரேட்டில் பந்துவீசியுள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியில் RCB பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தபோதும், ஷெப்பர்ட் மட்டும் இரண்டு ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய RCB:
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்களுக்கு ஏற்பட்ட முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், RCB அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது RCB அணி, விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

