ஜஸ்பிரித் பும்ராவை ஓவர்டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா; புதிய சாதனை! மாஸ் சம்பவம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.
Hardik Pandya and Jasprit Bumrah
இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் (44 பந்துகளில் 68 ரன்கள்) அடித்தார். இந்திய அணி வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனக ஜொலித்தார். ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்தில் 79 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
Hardik Pandya Record
ஹர்திக் பாண்ட்யா சாதனை
இந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ராவை ஹர்திக் பாண்ட்யா முந்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் பும்ரா 70 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா 100 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது சாதனையை ஓவர்டேக் செய்துள்ளார்.
India vs England T20
2016 உலகக்கோப்பை
ஹர்திக் பாண்ட்யா 2016ம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். எம்.எஸ் தோனியின் தலைமையில் 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றார். தொடர்ந்து தனது சிறப்பான ஆல்ரவுண்டர் திறமையால் அணிக்கு பெரும் பங்காற்றிய அவர் 2022ம் ஆண்டு ஜூனில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது இந்திய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Arshdeep Singh
அதிக டி20 விக்கெட்டுகள் யார்?
ஹார்திக் பாண்ட்யா 110 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,700 ரன்கள் குவித்துள்ளார். 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 86 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,769 ரன்கள் எடுத்தும் 84 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். 11 டெஸ்ட்களில் மட்டும் விளையாடியுள்ள பாண்ட்யா 2021ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார். அவர் 67 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். யுஸ்வேந்திர சஹல் 80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார். புவனேஷ்வர் குமார் 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.