MS Dhoni: தோனிக்கு ராணுவத்தில் என்ன பதவி? என்ன சம்பளம் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் தோனி ராணுவத்தில் உயர் பதவி வகித்து வருகிறார். அவர் என்ன பதவியில் இருக்கிறார்? என்ன சம்பளம்? என்பது குறித்து பார்ப்போம்.

What is Dhoni's salary in the Indian Army?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 'மிஸ்டர் கூல்' எனப்படும் தோனி இந்திய அணியை தனது தனித்துவ தலைமைப்பண்பு மூலம் உச்சிக்கு கொண்டு சென்றவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலககோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான்.
ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் தோனி
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நாட்டுக்காக விளையாட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்த தோனிக்கு இந்திய ராணுவத்தில் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தோனிக்கு 2011ம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு வழங்கப்பட்டது. தோனி கிரிக்கெட்டில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் பணியாற்றினார்.
மேலும் ராணுவ வீரர்களுடன் இணைந்து சிறப்பு பாராசூட் பயிற்சியையும் தோனி மேற்கொண்டார். பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் 106 பட்டாலியனில் தோனி பணியாற்றி இருக்கிறார். இந்திய ராணுவத்தின் ரிசர்வ் படைப் பிரிவான இது நாட்டுக்கு அச்சுறுத்துல் ஏற்படும் நேரங்களில் மற்ற படைகளுடன் இணைந்து செயல்படும். ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் தோனி சம்பளம் வழங்கப்படுகிறதா? என நீங்கள் கேட்கலாம்.
இந்திய ராணுவத்தில் தோனியின் சம்பளம் என்ன?
ஆம்.. மற்ற ராணுவ அதிகாரிகளை போன்று தோனிக்கும் ராணுவத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்து வரும் தோனிக்கு மாதம்தோறும் ரூ.1.21 லட்சம் முதல் ரூ.2.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் தோனி இந்த சம்பளத்தை பெற முடியாது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஏனென்றால் தோனி இந்திய ராணூவத்தில் கெளரவப் பதவியில் இருக்கிறார். அவர் ராணுவ அதிகாரிகளின் வழக்கமான கடமையை ஏதும் செய்யவில்லை. ராணுவம் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில்லை.
விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கெளரவப் பதவி
இதனால் தோனிக்கு மாதச் சம்பளம் என பெயரளவில் கூறப்பட்டாலும் அவருக்கு வழங்கப்படுவதில்லை. தோனி மட்டுமல்ல சச்சினுக்கும் ராணுவத்தில் கெளரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தவும், பொதுமக்கள் இந்திய ராணுவத்தை மேலும் புரிந்து கொள்ளும் வகையிலும் விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு ராணுவத்தில் கெளரவப் பதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.