- Home
- Sports
- Sports Cricket
- IPL 2026: சேஸிங்கில் புது சாதனை படைத்த 'கிங்' விராட் கோலி.. SRH-ஐ ஊதித்தள்ளிய RCB
IPL 2026: சேஸிங்கில் புது சாதனை படைத்த 'கிங்' விராட் கோலி.. SRH-ஐ ஊதித்தள்ளிய RCB
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்கள் விளாச, விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் டாப் ஸ்கோரராக ஜொலித்தார்.

ஆர்சிபி வெற்றி
ஐபிஎல் 19வது சீசனின் தனது முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமாக வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற பெரிய இலக்கை, தேவ்தத் படிக்கல் மற்றும் 'சேஸ் மாஸ்டர்' விராட் கோலியின் அரைசதங்களின் உதவியுடன் ஆர்சிபி எளிதாக சேஸ் செய்தது.
விராட் கோலி சாதனை
படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்கள் விளாச, விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் டாப் ஸ்கோரராக ஜொலித்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் மட்டும் 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் கோலி படைத்தார். இது அவரது 64வது அரைசதமாகும். 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் ஃபில் சால்ட் (8) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
தேவ்தத் படிக்கல் சூப்பர் பேட்டிங்
ஆனால், மூன்றாம் நிலையில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல், தனது அட்டகாசமான பேட்டிங்கால் ஆர்சிபிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்த படிக்கல், 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி அணி 8.4 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரஜத் படிதார் (12 பந்தில் 31) அதிரடியாக ஆடி வெற்றிப் பாதையை எளிதாக்கினார். ஜிதேஷ் சர்மா கோல்டன் டக் ஆனாலும், கோலியும் டிம் டேவிடும் (10 பந்தில் 16*) இணைந்து ஆர்சிபியின் வெற்றியை உறுதி செய்தனர். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டபி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
இஷான் கிஷன் அதிரடி
முன்னதாக இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அதிலிருந்து மீண்டு வந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. பவர்பிளேயில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டமும், பின்வரிசை வீரர்களின் பங்களிப்பும் ஹைதராபாத் அணியை 200 ரன்களைக் கடக்க உதவியது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் வலது கை பேட்ஸ்மேனான அனிகெட் வர்மா, வெறும் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் விளாசினார்.

