ஒரே போட்டியில் கோலி படைத்த சாதனைகளின் பட்டியல் – இத்தனை சாதனைகளா?
Virat Kohli IPL 2025 Records RCB vs CSK IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் 2025 தொடரின் 52ஆவது லீக் போட்டி
Virat Kohli IPL 2025 Records RCB vs CSK IPL 2025 : பெங்களூருவில் உள்ள எம் சின்னச்சுவாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 52ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததோடு அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விராட் கோலி படைத்த சாதனைகளின் பட்டியல்
இந்தப் போட்டியில் 5 சிக்சர், அரைசதம் அடித்ததன் மூலமாக விராட் கோலி சிஎஸ்கே அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அது என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாதனை 1: ஆர்சிபி அணிக்காக கோலி தொடர்ச்சியாக அடித்த 4ஆவது அரைசதம் இதுவாகும்.
சாதனை 2: ஆர்சிபி அணிக்காக 300 சிக்ஸர்களை கடந்த கோலி தற்போது 304 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2ஆவது முறையாக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு 10வது அரைசதம்
சாதனை 3: சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலி அடித்த 10வது அரைசதம் இதுவாகும். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
சாதனை 4: சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,146 ரன்கள் குவித்துள்ள கோலி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சாதனை 5: சின்னச்சுவாமி மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கோலி அதிரடியாக விளையாடி அணி 200 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
214 ரன்கள் வெற்றி இலக்கு
பின்னர் 214 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஷேக் ரஷீத் 14 ரன்னிலும், சாம் கரண் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
ஆயுத் மாத்ரே 25 பந்துகளில் அரைசதம்
ஆயுத் மாத்ரே 25 பந்துகளில் அரைசதம் அடித்து இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 17 வயது 291 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா 21 வயது 148 நாட்களில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர் 94 ரன்களில் நடையை கட்ட அவருக்கு பிறகு வந்த டெவால்ட் பிரேவிஸ் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். ஆனாலும் அவர் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. இறுதியாக சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 12 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.
211/5 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே
தோனி ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து வந்த ஷிவம் துபே முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை வந்தது. இன்னொரு சிக்ஸர் அடித்திருந்தால் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கும். ஆனால், கடைசி 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட 211/5 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள்
இந்த போட்டியில் ஆர்சிபிக்கு புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் இருவரும் கடைசி 2 ஓவர்களை சிறப்பாக பந்து வீசியுள்ளனர். கடைசி ஒவரில் யாஷ் தயாள் தொடர்ந்து யார்க்கர் பந்துகளாக வீசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், அந்த ஓவரில் தோனியின் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார்.