- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: யார் கண் பட்டதோ? தொடர்ந்து சொதப்பும் வைபவ் சூர்யவன்ஷி.. அம்பலமான பலவீனம்!
Vaibhav Suryavanshi: யார் கண் பட்டதோ? தொடர்ந்து சொதப்பும் வைபவ் சூர்யவன்ஷி.. அம்பலமான பலவீனம்!
Vaibhav Suryavanshi: ஐபிஎல் தொடரில் கலக்கி விருதுகளை அள்ளிக்குவித்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இலங்கை ஏ அணிக்கு எதிரான 3 ஓடிஐ போட்டிகளிலும் ரன் அடிக்காமல் சொதப்பியுள்ளார். அவரது பலவீனம் அம்பலமாகியுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் சொதப்பல்
இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் மூன்றாவது போட்டி இலங்கையின் தம்புலாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் 66 பந்தில் 72 ரன்கள் விளாசினார். அதே வேளையில் ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா 'ஏ' அணிக்காக மீண்டும் ஒருமுறை சொதப்பியுள்ளார். இன்றைய போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 14 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.
ஐபிஎல்லில் கலக்கல்; வெளிநாட்டில் சொதப்பல்
2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, ஆரஞ்சு கேப் உட்பட ஐந்து முக்கிய விருதுகளை வென்றார். இதன் மூலம் பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய சீனியர் அணியிலும் இடம்பிடித்தார். அதற்கு முன்னதாக, இந்தியா 'ஏ' அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் இந்த தொடர் முழுவதும் அவர் சொதப்பி வருகிறார்.
3 போட்டிகளில் மொத்தம் 79 ரன்கள்
அதாவது வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் போட்டியில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிராக 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்து, மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது மீண்டும் இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக வெறும் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அவசர கதி ஷாட்கள்
இந்த மூன்று போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி கேட்ச் கொடுத்துதான் ஆட்டமிழந்துள்ளார். அவர் எந்த ஒரு பந்துவீச்சுக்கும் திணறவில்லை. எல்லா போட்டிகளிலும் ஆரம்பத்தில் பவுண்டரிகளைப் பறக்கவிடுகிறார். ஆனால், பந்துகள் ஸ்விங் அல்லது ஸ்பின் ஆகும் ஆரம்ப ஓவர்களிலேயே, தேவையில்லாமல் பந்துகளைக் காற்றில் தூக்கி அடித்து அவுட் ஆகிறார். ஷார்ட் பால்களுக்கு எதிராக ரன் குவித்தாலும், அதீத ஆக்ரோஷத்தால் விக்கெட்டைப் பரிசளித்து விடுகிறார்.
பலவீனத்தை அறிந்து கொண்ட பவுலர்கள்
டி20 கிரிக்கெட்டில் உள்ள அதே அதிரடி மனநிலையை ஒருநாள் போட்டிகளிலும் கையாள்வதுதான் அவரது தற்போதைய பலவீனம். பந்துவீச்சாளர்கள் அவரது இந்த அவசரத்தைக் கணித்து, காற்றில் பந்தைத் தூக்கி அடிக்கத் தூண்டும் பந்துகளை வீசி அவரை எளிதாக அவுட் செய்கிறார்கள். இந்திய தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி அந்த தொடருக்கு முன்னதாக தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

