- Home
- Sports
- Sports Cricket
- IND vs ZIM: தோனி சாதனையை தூள் தூளாக்கிய திலக் வர்மா.. ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
IND vs ZIM: தோனி சாதனையை தூள் தூளாக்கிய திலக் வர்மா.. ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
IND vs ZIM: இஷான் கிஷான் அதிரடியால் 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது. அரை சதம் விளாசிய திலக் வர்மா தோனி சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

ஜிம்பாவ்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா
இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, புதிய T20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தனது முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இன்று ஹராரேவில் நடந்த இரண்டாவது T20 போட்டியில், ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா துவம்சம் செய்தது.
இந்த வெற்றியின் மூலம், 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் முறையே 0-4, 0-2 என்ற கணக்கில் தொடர்களை இழந்த நிலையில், இந்த வெற்றி ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சிக்கு கிடைத்த முதல் தொடர் வெற்றியாக அமைந்துள்ளது.
இஷான் கிஷன் அதிரடி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி (44 பந்துகளில் 81 ரன்கள்) மற்றும் திலக் வர்மாவின் அபாரமான ஆட்டத்தால் (29 பந்துகளில் 60 ரன்கள்) 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக வீரர் யாஷ் தாக்கூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஆட்டநாயன் விருது வென்றார்.
திலக் வர்மா சூப்பர் பேட்டிங்
இந்த போட்டியில் 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 60 ரன்கள் விளாசிய திலக் வர்மா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் சக வீரர் இஷான் கிஷனை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தோனி சாதனையை முறியடித்த திலக் வர்மா
இந்த ஆட்டத்தின் மூலம், திலக் வர்மா T20 போட்டிகளில் மொத்தமாக 1,634 ரன்களைக் குவித்துள்ளார். இதுவரை 58 போட்டிகளில், 55 இன்னிங்ஸ்களில் விளையாடி, 44.16 என்ற சராசரியுடன், 145.37 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், ஒன்பது அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 120* ஆகும்.
இதன் மூலம், தோனி (98 போட்டிகளில் 1,617 ரன்கள்) மற்றும் ரெய்னா (78 போட்டிகளில் 1,605 ரன்கள்) ஆகியோரின் மொத்த T20 ரன்களை அவர் தாண்டியுள்ளார். இந்த ஆண்டில் திலக் வர்மாவின் ஆட்டம் ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளது. 18 T20 போட்டிகளில் விளையாடி, 34.69 சராசரியுடன் 451 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 60 ஆகும்.
இந்திய அணிக்காக T20-ல் அதிக ரன்கள் எடுத்த முதல் மூன்று வீரர்கள்:
1. ரோஹித் சர்மா (159 போட்டிகளில் 4,231 ரன்கள்)
2. விராட் கோலி (125 போட்டிகளில் 4,188 ரன்கள்)
3. சூர்யகுமார் யாதவ் (113 போட்டிகளில் 3,272 ரன்கள்)

