- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Vaibhav Suryavanshi Net Worth: ஐபிஎல் தொடரில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த உலகத்தையே தன் பக்கம் திருப்பியுள்ள 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சர்வதேச பவுலர்களை கதற விடும் வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன், பும்ரா மற்றும் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டு வருகிறார். தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ராஜஸ்தான் அணியை பிளேஆப் சுற்றுவரை அழைத்து வந்துள்ளார்.
65 சிக்ஸர்கள் விளாசி சாதனை
அதுவும் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை யாரும் மறக்க முடியாது. பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட அனைத்து பவுலர்களைவும் கதற விட்ட அவர் வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். இந்த சீசனில், சூர்யவன்ஷி 15 இன்னிங்ஸ்களில் 45.33 சராசரி மற்றும் 242.85 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 680 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 103. அவர் எதிர்கொண்ட 280 பந்துகளில் 55 பவுண்டரிகள் மற்றும் 65 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இளம் வயது கோடீஸ்வரர் வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு உலகில் அசுர வளர்ச்சி கண்டுவரும் வைபவ், மிக இளம் வயதிலேயே கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். நடப்பு மே 2026 நிலவரப்படி, இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை இருக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் ஒப்பந்த ஊதியம், உள்ளூர் போட்டிகளுக்கான சம்பளம் மற்றும் வணிக ரீதியிலான விளம்பர வருவாய் ஆகியவை இதில் அடங்கும்.
குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ. 1.10 கோடி கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் சீசன்களில் இருந்து மட்டும் இதுவரை சுமார் ரூ. 2.2 கோடியை இவர் வருமானமாகப் பெற்றுள்ளார். இன்றைய நவீன கிரிக்கெட் வீரர்கள் ஆடம்பர பங்களாக்களில் வாழ்வதையே விரும்பும் நிலையில், வைபவ் இன்றும் தனது வேர்களை மறக்கவில்லை. பீகாரில் உள்ள தனது எளிமையான பூர்விக வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இந்த கிராமத்து வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை இருக்கலாம்.
லைசென்ஸ் இல்லை; ஆனால் வரிசை கட்டும் சொகுசு கார்கள்
அதே நேரத்தில், தனது தொழில்முறை கிரிக்கெட் பயிற்சிகளுக்கு எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக, மும்பையில் சுமார் ரூ. 2.5 கோடி முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான அதிநவீன சொகுசு பிளாட் ஒன்றை வைபவ் வாங்கியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகாததால், சட்டப்படி அவரிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை. இருப்பினும், அவரது கராஜில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் டாட்டா கர்வ் ஈவி (Tata Curvv EV) போன்ற பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. மைதானத்தில் அவர் காட்டிய அதிரடி ஆட்டத்தைப் பாராட்டி, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் இந்த விலையுயர்ந்த கார்கள் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

