பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வெட்டிச்செலவு செய்யாமல், அரசு பள்ளிகளுக்கு உதவிகளை செய்யும் ரெய்னா..!
சுரேஷ் ரெய்னா தனது 34வது பிறந்தநாளையொட்டி, 34 அரசு பள்ளிகளுக்கு சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தருகிறார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லிலும் இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஆடவில்லை. இந்நிலையில், வரும் நவம்பர் 27ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் சுரேஷ் ரெய்னா.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வெட்டிச்செலவு செய்யாமல், தனது பிறந்தநாளையொட்டி, 34 அரசு பள்ளிகளுக்கு சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தரவுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக இருக்கும் சுரேஷ் ரெய்னா, தன் மகளின் பெயரில் இயங்கும் கிரேசியா ரெய்னா ஃபவுண்டேஷன் மூலம் இந்த உதவிகளை அவர் செய்ய உள்ளார். ”யுவா அன்ஸ்டாப்பபிள்” என்ற இயக்கத்துடன் சேர்ந்து அடுத்த ஆண்டு முழுக்க இந்த நலத் திட்ட உதவிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரைட்ஏஜ் என்ற மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்த ரெய்னா முடிவு செய்துள்ளார். ஸ்மார்ட் பள்ளி அறைகளையும் ஏற்படுத்தித்தர உள்ளார் ரெய்னா. இந்த நலப்பணிகள் எல்லாம் உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ரெய்னா, அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வந்ததை அனைத்து தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.