ஹெட், அபிஷேக் சர்மாவின் கூட்டணி கொடுத்த சக்ஸஸ் – ஜெட் வேகத்தில் உயர்ந்த ஸ்கோர் – 266 ரன்கள் குவித்த ஹைதராபாத்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடவே, முதல் 6 ஓவர்களில் அந்த அணி 125 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இருவரும் முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஒவ்வொரு ஓவரிலும் 15 ரன்களுக்கு மேல் எடுத்தனர். மேலும், பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், ஹைதராபாத் அணியும் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது.
ஹைலைட்ஸ்:
முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இந்த சீசனில் முதல் 5 ஓவர்களில் முறையே 19, 21, 22, 21, 20 என்று மொத்தமாக 103 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமின்றி, டி20 கிரிக்கெட்டிலும் பவர்பிளேயிலும் அதிகபட்சமாக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 105 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை 5.1 ஓவரிலேயே ஹைதராபாத் 107 ரன்கள் குவித்து முறியடித்துள்ளது.
பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களில் ஹெட் 84 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஏற்கனவே சுரேஷ் ரெய்னா 87 ரன்கள் குவித்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் தான் குல்தீப் யாதவ், டெல்லிக்கு கடவுளாக தோன்றினார். அவரது 2ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் கைப்பற்றினார். அவர், 32 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 89 ரன்கள் குவித்தார். எய்டன் மார்க்ரம் 1 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நிதிஷ் ரெட்டி 37 ரன்கள் எடுக்க, கடைசியில் ஷாபாஸ் அகமது கேமியோ போன்று விளையாடி அரைசதம் அடித்தார். இது அவரது முதல் அரைசதம் ஆகும். அவர் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாச சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது.
முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக 15 ஓவர்களில் ஹைதராபாத் 205 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்ததே அந்த அணி 266 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் 266/7 ரன்கள் குவித்ததன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரே சீசனில் 3ஆவது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277/3, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 287/3 ரன்கள் என்று எடுத்து சாதனை வரலாற்று சாதனை படைத்தது.