IPL 2023: ஐபிஎல்லில் எந்த அணிக்காக ஆட ஆசை..? மனம் திறந்த கவாஸ்கர்
ஐபிஎல்லில் ஆடியிருந்தால் எந்த அணிக்காக ஆட ஆசை என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார டி20 லீக் தொடராக ஐபிஎல் திகழ்கிறது. ஐபிஎல்லில் நன்றாக ஆடும் வீரர்களுக்கு இந்திய அணியில் மட்டுமல்லாது, வெளிநாட்டு வீரர்களுக்கும் அவர்களது தேசிய அணியில் இடம் கிடைக்கிறது. அந்தளவிற்கு இளம் வீரர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக ஐபிஎல் திகழ்கிறது.
ஐபிஎல் தொடங்குவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஆடிய ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு டி20 கிரிக்கெட்டிலோ ஐபிஎல்லிலோ ஆடும் கொடுப்பினை இல்லை.
இந்நிலையில், இந்தியாவிற்காக 125 டெஸ்ட் மற்றும் 108 ஒருநாள் போட்டிகளில் முறையே 10122 மற்றும் 3092 ரன்களை குவித்துள்ள மிகப்பெரிய ஜாம்பவனான சுனில் கவாஸ்கர், ஐபிஎல்லில் ஆடியிருந்தால் எந்த அணியில் ஆடியிருப்பார் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் தான். யார் தான் மும்பை அணியில் ஆட விரும்பமாட்டார்கள்..? அப்படி இல்லையென்றால், அடுத்த ஆப்சன் கண்டிப்பாக சிஎஸ்கே தான். அதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம், சிஎஸ்கே அணி உரிமையாளர்களின் கிரிக்கெட் மீதான ஆர்வம். ஸ்ரீநிவாசன் கிரிக்கெட்டுக்காக நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்.
2வது காரணம், தோனியுடன் ஓய்வறையை பகிர வேண்டும் என்பதுதான். தோனி அணியை எப்படி வழிநடத்துகிறார் என்பதை பார்க்கும் ஆர்வம் எனக்கு இருக்கிறது என்றார் கவாஸ்கர்.