- Home
- Sports
- Sports Cricket
- பஞ்சாப்பை பைனலுக்கு அழைத்து சென்ற ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?
பஞ்சாப்பை பைனலுக்கு அழைத்து சென்ற ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் கேப்டன்கள் ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2025: PBKS Captain Shreyas Iyer Slapped With ₹24 Lakh Fine After MI Match
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 2வது எலிமினேட்டர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 44 ரன்களும், திலக் வர்மா 29 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். பின்பு விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்த ஷ்ரேயாஸ் ஐயர்
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 87 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார். ஐபிஎல் 2025 சீசனுக்கான இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் நாளை மோதுகின்றன. இதனால் பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்
இந்நிலையில், நேற்றைய போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஐபிஎல் அபராதம் விதித்துள்ளது. அதாவது பஞ்சாப் அணி மெதுவாக பந்து வீசியதால் கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயருக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்றைய போட்டியில் அந்த அணியின் பிளேயிங் லெவனில் விளையாடிய வீரர்கள் மற்றும் இம்பாக்ட் வீரர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இரண்டாவது மெதுவான ஓவர் வீதமீறலாக இது இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அபராதம்
மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை இது இந்த சீசனில் அவர்களின் மூன்றாவது ஓவர் ரேட் குற்றமாகும். இதனால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் நேற்றைய போட்டியில் அந்த அணியின் பிளேயிங் லெவனில் விளையாடிய வீரர்கள் மற்றும் இம்பாக்ட் வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான IPL நடத்தை விதிகளின் கீழ் இந்த இரண்டு அபராதங்களும் விதிக்கப்பட்டன.