என் கெரியரில் என் பவுலிங்கை போட்டு பொளந்துகட்டிய 2 வீரர்கள் அவங்கதான்..! ஷேன் வார்ன் ஓபன் டாக்
தனது கெரியரில் தனது பவுலிங்கை பொளந்துகட்டிய 2 வீரர்கள் யார் யார் என்று மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார் ஷேன் வார்ன்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், தனது ரிஸ்ட் ஸ்பின்னால் எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கை சுழல் ஜாம்பவான் முரளிதரனுக்கு அடுத்து, 708 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்தில் இருப்பவர் ஷேன் வார்ன்.
ஷேன் வார்ன் தனது லெக் ஸ்பின்னால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தவர். 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய வார்ன், தனது சுழலால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்.
ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரான ஷேன் வார்ன், தனது கெரியரில் தனது பவுலிங்கை அடித்து நொறுக்கிய 2 வீரர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய ஷேன் வார்ன், எனது சமகால வீரர்களில் சச்சினும் லாராவும் மிகச்சிறந்தவர்கள். எனது காலத்தில் மட்டுமல்ல; ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் அவர்கள். எனது பவுலிங்கை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டவர்கள் அவர்கள் தான். ஆனாலும் எனக்கு அவர்களுக்கு பந்துவீசத்தான் பிடிக்கும். சில நேரங்களில் எனது பவுலிங்கை பொளந்துகட்டினாலும், சில நேரங்களில் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்திவிடுவேன் என்றார் ஷேன் வார்ன்.
சிறந்த பவுலர்களை சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடுவதையும், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த பவுலர்கள் பந்துவீசி மிரட்டுவதையும் பார்க்கத்தான் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அந்த வகையில் ஷேன் வார்னை சச்சினும் லாராவும் ஆடும் விதம் அபாரமாக இருக்கும். அதேவேளையில், அவர்களை ஷேன் வார்ன் தனது சுழலால் தெறிக்கவிடுவதும் பார்க்க அருமையாக இருக்கும்.